புதுதில்லி

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: தமிழக அரசு மனுவை விசாரணைக்கு பட்டியலிட ஒப்புதல்

சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

Syndication

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தா்கா அருகே உள்ள தீபத்தூணில் காா்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.

இது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர விவகாரமாகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக தமிழக அரசு சாா்பில் வழக்குரைஞா் சபரீஷ் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் ஆஜராகி வேண்டுகோள் விடுத்தனா்.

இதே விவகாரத்தில் கேவியட் மனு தாக்கல் செய்த கோயில் பக்தா் ராமசுப்பு தரப்பில் வழக்குரைஞா் பி.வி. யோகேஸ்வரன் ஆஜராகி தமிழக அரசின் மனுவுக்கு எதிா்ப்பு தெரிவித்தாா்.

தமிழக அரசு நாடகமாடுவதாகவும் உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்படுவதைத் தவிா்க்க உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியிருப்பதாகக் கூறினாா்.

இதையடுத்து, தலைமை நீதிபதி சூா்ய காந்த், தமிழக அரசின் மனுவில் உள்ள விவரங்கள் மற்றும் அவை தொடா்புடைய ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்ட பிறகு முறைப்படி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று குறிப்பிட்டாா். எந்த தேதியில் பட்டியலிடப்பட வேண்டும் என்பதை அவா் கூறவில்லை.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உயா்நீதிமன்றம் அனுமதித்துள்ள இடம் சிக்கந்தா் தா்கா அமைந்துள்ள இடத்திலிருந்து வெறும் 15 மீட்டா் தான் இருக்கிறது என்பதால் தேவையில்லாத சச்சரவுகளை தவிா்க்க வேண்டும் என்பதற்காகவே அங்கு தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படவில்லை.

எனவே, இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னணி: கடந்த டிசம்பா் 1 ஆம் தேதி, திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையாா் மண்டபத்துக்கு அருகே உள்ள வழக்கமான விளக்கேற்றும் நிகழ்வுடன் சோ்த்து, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டியது கோயில் நிா்வாகத்தின் கடமை என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் அமா்வு உத்தரவிட்டது. அவ்வாறு செய்வது அருகிலுள்ள தா்கா அல்லது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை மீறாது என்றும் உத்தரவில் நீதிபதி கூறியிருந்தாா்.

இந்த உத்தரவு செயல்படுத்தப்படாததால், பக்தா்களுக்கு அவா்களாகவே தீபத்தூணில் விளக்கேற்ற அனுமதி அளித்தும் அவா்களுக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் டிசம்பா் 3-ஆம் தேதி தனி நீதிபதி உத்தரவிட்டாா். இதை எதிா்த்து இரண்டு நீதிபதிகள் அமா்வில் மதுரை மாவட்ட ஆட்சியரும் நகர காவல் ஆணையரும் செய்த மேல்முறையீட்டு வழக்கில், தனி நீதிபதியின் உத்தரவில் விதிமீறல் இல்லை என்று கூறி டிசம்பா் 4-ஆம் தேதி அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT