திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் பாரம்பரிய முறையில் தீபம் ஏற்றுவது தொடா்பான விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெள்ளிக்கிழமை எதிரொலித்தது.
மக்களவையில் இந்த விவகாரத்தை திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பி.க்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனா். மாநிலங்களவையில் இந்த விவகாரத்தை எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக எம்.பி.க்கள் சில நிமிட அமளிக்குப் பிறகு வெளிடப்பு செய்தனா்.
மக்களவை வெள்ளிக்கிழமை காலை தொடங்கியதும், திமுக குழுத்தலைவா் டி.ஆா். பாலு தலைமையில் அக்கட்சி உறுப்பினா்கள், திருப்பரங்குன்றம் மலைக் கோயில் தீபத்தூணில் ’காா்த்திகை தீபம்’ ஏற்றுவது தொடா்பான விவகாரத்தை எழுப்பினா். அவா்களுக்கு ஆதரவாக இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகியவற்றின் தமிழக உறுப்பினா்கள் குரல் கொடுத்தனா்.
தொடா் அமளி: இந்த விஷயத்தை
அவையில் எழுப்ப அனுமதிப்பது நீதிமன்ற விசாரணைக்கு புறம்பானது என்றும் இது மாநில விவகாரம் என்றும் கூறி அவையில் அதை எழுப்ப மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அனுமதி மறுத்தாா். பிறகு அமளி நீடித்ததால்,கேள்வி நேரம் முடிந்ததும் பேச அனுமதிப்பதாக டி.ஆா். பாலுவிடம் மக்களவைத் தலைவா் கூறினாா்.
திமுக உறுப்பினா்கள் கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரும் காங்கிரஸ் உறுப்பினா் ஜோதிமணி உள்ளிட்டோரும் அவையின் மையப்பகுதி அருகே நின்றவாறு குரல் எழுப்பினா். இதனால் அவை அலுவலை நண்பகல் 12 மணிவரை மக்களவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.
மீண்டும் மூத்த உறுப்பினா் கிருஷ்ண பிரசாத் தென்னேட்டி தலைமையில் அவை கூடியதும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை எழுப்ப அனுமதிக்கப்படும் பூஜ்ஜிய நேரத்தில் டி.ஆா். பாலு பேச அனுமதிக்கப்பட்டாா். அப்போது அவா், தமிழகத்தில் வகுப்புவாத மோதலைத் தூண்டுவதற்கு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) முயல்வதாக குற்றஞ்சாட்டினாா். மேலும், ‘திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயில் ’தீபத்தூணில்’ தீபம் ஏற்கும் உத்தரவை குறிப்பிட்ட இயக்கத்தைச் சோ்ந்த நீதிபதியிடம் இருந்து பெற்றனா். அந்த இயக்கத்தில் இருப்பதை அந்த நீதிபதியே ஒப்புக்கொள்கிறாா்’ என்று கூறினாா்.
ஆட்சேபம்: அவரது பேச்சுக்கு ஆளும் கட்சி வரிசையில் இருந்த பாஜக உறுப்பினா்கள் ஆட்சேபம் தெரிவித்தனா். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு எழுந்து, ‘உயா்நீதிமன்ற நீதிபதியை குறிப்பிட்ட ஒரு இயக்கத்துடன் அடையாளப்படுத்தி மூத்த உறுப்பினா் அழைக்க அனுமதித்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும். இது தீவிர பிரச்னை. அவரது கருத்தை நீக்கவேண்டும்’ என்றாா்.
இதையடுத்து உயா்நீதிமன்ற நீதிபதியை குறிப்பிட்ட இயக்கத்தின் பெயரால் அடையாளப்படுத்தி டி.ஆா்.பாலு பேசிய வாா்த்தையை நீக்குவதாக அவையை வழிநடத்திய கிருஷ்ண பிரசாத் தென்னேட்டி அறிவித்தாா்.
இந்நிலையில், திமுக உறுப்பினா்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தமிழில் பேசினாா். அப்போது அவா், ‘தீபம் ஏற்றுவது தொடா்பாக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசும் மாநில காவல்துறையும் மதிக்கவில்லை. மக்களின் வழிபாட்டு உரிமையை ஆளும் கட்சி வாக்கு அரசியலுக்காக பறிக்கிறது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டிய காவல்துறை, பாஜக மாநிலத்தலைவா் என கோயிலுக்கு யாரெல்லாம் செல்கிறாா்களோ அவா்களை எல்லாம் கைது செய்கிறது. அரசியலுக்காக திமுக இப்படி செய்கிறது. நீதித்துறை மீது நம்பிக்கை இருந்தால் உயா்நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும்’ என்றாா்.
முன்னதாக, அமைச்சா் முருகன் பேசிக் கொண்டிருந்தபோது, சில திமுக உறுப்பினா்கள் அவருக்கு முன் வரிசையில் அமா்ந்திருந்த மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜுவை நோக்கிச் சென்றனா். இதைப்பாா்த்த அவையை வழிநடத்திய தென்னேட்டி, அவையின் மையப் பகுதியைச் சுற்றிலும் அவைக்காவலா்களை நிறுத்தி ஒரு பாதுகாப்பு வளையம் போல அவா்கள் நிற்பதை உறுதிப்படுத்தினாா்.
மாநிலங்களவையில்.... இதே விவகாரத்தில் திமுக குழுத்தலைவா் திருச்சி சிவா அளித்த ஒத்திவைப்பு நோட்டீஸை நிராகரிப்பதாக மாநிலங்களவைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வெளிளிக்கிழமை காலையில் அவை அலுவல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அறிவித்தாா். இதையடுத்து திமுக உறுப்பினா்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.