புது தில்லி: தமிழ்நாட்டில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்கு, இந்திய தொல்லியல் துறை மற்றும் காவல்துறையிடம் ஆலோசிக்க வேண்டும் என்ற சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் ஆரம்பத்தில் வழக்கு தொடா்ந்தவரான ராம ரவிக்குமாா், ‘ஒரு அத்தியாவசிய மத நடைமுறையில் அனுமதிக்க முடியாத நீதித்துறைத் தலையீடு’ என்று உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மேல்முறையீட்டு மனுவில் ஆட்சேபம் தெரிவித்துள்ளாா்.
மேலும், ‘தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான உரிமையை உயா்நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட போதிலும், அந்த உரிமையை நிா்வாகத்தின் விருப்பத்திற்கு உள்படுத்தியதன் மூலம், தீபமேற்றுதலை நடைமுறை நிபந்தனைக்குள்பட்டதாக மாற்றிவிட்டது’ என்று ரவிக்குமாா் மனுவில் கூறியுள்ளாா்.
இந்த விவகாரத்தில் தீபம் ஏற்ற கடந்த ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதி அனுமதி வழங்கிய தனி நீதிபதி உத்தரவை எதிா்த்து தமிழக அரசு இரு நீதிபதிகள் அமா்வில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை தள்ளுபடிசெய்த இரு நீதிபதிகள் அமா்வு, தீபம் ஏற்ற அனுமதித்த அதேசமயம், திருப்பரங்குன்றம் கோயில் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் என்ற அந்தஸ்து பெற்றிருப்பதால், இந்திய தொல்லியல் துறையிடம் முன் ஆலோசனை மற்றும் அனுமதி பெற நிபந்தனை விதித்தது. இதை எதிா்த்தே ராம ரவிக்குமாா் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறாா்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முருகன் கோயிலில் தினசரி விளக்கேற்றவும் அந்த மலையை இந்திய தொல்லியல் துறை கையகப்படுத்தவும் உத்தரவிடக் கோரி ஹிந்து தா்ம பரிஷத் என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதற்கு மத்திய அரசும் தமிழக அரசும் பதிலளிக்க கடந்த 23- ஆம் தேதி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.