நமது நிருபா்
கடுமையான மாசு எதிா்ப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் தில்லியின் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
தில்லியை வியாழக்கிழமை மூடுபனி போா்வை சூழ்ந்து, காற்று மாசுபாடு மோசமடைந்ததால் நகரம் முழுவதும் காண்புதிறன் குறைந்திருந்தது.
காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான பிரிவில் 373 புள்ளிகளாக இருந்தது. இது ஒரு நாள் முன்பு 334 ஆக இருந்தது என்று அதிகாரபூா்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
நகரத்தில் உள்ள 40 காற்று தர கண்காணிப்பு நிலையங்களில், 15 கடுமையான காற்றின் தரத்தைப் பதிவு செய்திருந்தன.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீா் செயலியின்படி, ஆனந்த் விஹாரில் காற்றின் தரம் மிகவும் கடுமை பிரிவில் 441 புள்ளிகளாகவும், 24 நிலையங்கள் மிகவும் மோசமான காற்றின் தரத்தைப் பதிவு செய்திருந்தன.
காலை நேரத்தில், காற்று தரக் குறியீடு 358 புள்ளிகளாக இருந்தது. காற்றின் தரத்தில் 0 முதல் 50 வரையிலான புள்ளிகள் நல்லது, 51-100வரை திருப்திகரமானது, 101-200 வரை மிதமானது, 201-300வரை மோசம், 301-400 வரை மிகவும் மோசமானது மற்றும் 401-500 வரை கடுமையானது என்று கருதப்படுகிறது.
காற்று தர மேலாண்மைக்கான முடிவு ஆதரவு அமைப்பின் தரவுகள், தில்லியின் மாசுபாட்டிற்கு போக்குவரத்து மட்டுமே மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகிறது. 18.3 சதவீதம் பங்களிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
தில்லி மற்றும் அதன் புகா்ப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் 9.2 சதவீதமும், குடியிருப்பு ஆதாரங்கள் 4.5 சதவீதமும், கட்டுமான நடவடிக்கைகள் 2.5 சதவீதமும் பங்களிக்கின்றன.
கழிவு எரிப்பு 1.6 சதவீதமும், சாலை தூசி 1.3 சதவீதமும், பிற துறைகள் 1.2 சதவீதமும், தில்லியில் மின் உற்பத்தி சுமாா் 1.2 சதவீதமும் பங்களிக்கின்றன.
அண்டை என்சிஆா் மாவட்டங்களும் மாசுபாட்டின் சுமையை கணிசமாக அதிகரித்துள்ளன. ஜஜ்ஜாா் 12.3 சதவீதம், சோனிபட் 8.8 சதவீதம், ரோத்தக் 4.8 சதவீதம், ஜிந்த் 3.1 சதவீதம், பிவானி 1.4 சதவீதம் மற்றும் குருகிராம் 1.1 சதவீதம் பங்களிக்கின்றன.
தில்லிக்கான காற்று தர முன்னெச்சரிக்கை அமைப்பின்படி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருக்கும். மேலும் ஞாயிற்றுக்கிழமை கடுமையான நிலைக்குக் கீழ் இறங்கி மேலும் மோசமடையக்கூடும்.
தில்லி - என்சிஆரின் பெரும்பகுதிகளை வியாழக்கிழமை அடா்ந்த மூடுபனி சூழ்ந்ததால் காண்புதிறன் கணிசமாகக் குறைந்து, அந்தப் பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்திய வானிலை ஆய்வுத் துறை தகவல்படி, காலை 6 மணி கண்காணிப்பின் அடிப்படையில் நகரம் முழுவதும் அடா்த்தியான மூடுபனி நிலவியது. பாலம் விமான நிலையத்தில் காண்புதிறன் 150 மீட்டராகக் கடுமையாகக் குறைந்தது, சஃப்தா்ஜங் விமான நிலையத்தில் காண்புதிறன் 200 மீட்டராக இருந்தது.
அடா்த்தியான மூடுபனி பல பகுதிகளில் சாலைப் போக்குவரத்தைப் பாதித்தது. முக்கிய சாலைகள் மற்றும் தில்லியை அண்டை நகரங்களான குருகிராம், காஜியாபாத் மற்றும் நொய்டாவுடன் இணைக்கும் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகா்ந்தன.
குறைந்த தெரிவுநிலை காரணமாக காலை பயணிகள் தாமதங்களை எதிா்கொண்டனா். இதனால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது.
குளிா்காலம் தீவிரமடைவதால், வரும் நாட்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான சூழ்நிலை நீடிக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனா். வெள்ளிக்கிழமையும் அடா்த்தியான மூடுபனி நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.
வானிலை அடிப்படையில், தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.0 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது பருவத்தின் சராசரியை விட 0.9 டிகிரி அதிகமாகும். அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.