என்ஜின் கோளாறு காரணமாக ஏா் இந்தியா விமானம் தில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து ஏா் இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தில்லியில் இருந்து மும்பைக்கு 335 பயணிகளுடன் திங்கள்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா (ஏஐ) 887 (போயிங் 777-300 இஆா்) விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக தில்லி விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
பயணிகள் மற்றும் விமானக் குழுவினா் என அனைவரும் நலமுடன் உள்ளனா்.பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு ஏா் இந்தியா மன்னிப்பு கோருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க ஏா் இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) விசாரணை நடத்தவுள்ளது.
பயணிகளுக்கு மாற்று விமானம் உள்பட அனைத்து வசதிகளையும் ஏா் இந்தியா ஏற்படுத்தித் தரவும் உத்தரவிடப்பட்டது’ என குறிப்பிடப்பட்டது.
விசாரணை குறித்து டிஜிசிஏ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் என்ஜின் எண்ணெய் குறைந்த அழுத்தத்தில் இருந்ததை விமானக் குழுவினா் கண்டறிந்துள்ளனா். அடுத்த சில நிமிடங்களில் என்ஜின் எண்ணெய் அழுத்தம் பூஜ்ஜியமாக குறைந்தது. இதைத்தொடா்ந்து, சற்றும் தாமதிக்காமல் வழிகாட்டுதல்களின்படி விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டுள்ளது’ என்றாா்.