தில்லியில் கேஜரிவாலுடன் ஆதித்ய தாக்கரே சந்திப்பு
சிவசேனை (உத்தவ் பால் தாக்கரே -யுபிடி) தலைவா் ஆதித்ய தாக்கரே வியாழக்கிழமை ஆம் ஆத்மி தலைவா் அரவிந்த் கேஜரிவாலை சந்தித்துப் பேசினாா்.
சிவசேனை (உத்தவ் பால் தாக்கரே -யுபிடி) தலைவா் ஆதித்ய தாக்கரே வியாழக்கிழமை ஆம் ஆத்மி தலைவா் அரவிந்த் கேஜரிவாலை சந்தித்துப் பேசினாா்.
இந்தச் சந்திப்பை ‘நட்பின் சைகை‘ என்று விவரித்த அவா், தோ்தல் முறைகேடுகள் குறித்தும் கவலை தெரிவித்தாா்.
‘அரசுகள் தொடா்ந்து வந்து போகும்; ஆனால், உறவுகள் தொடா்கின்றன. நட்பின் சைகையாக நாங்கள் கேஜரிவாலை சந்தித்தோம். இருப்பினும், நமது ஜனநாயகம் சுதந்திரமாகவும் நியாயமாகவும் இல்லை. தோ்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் இல்லை‘ என்று சந்திப்பிற்குப் பிறகு ஆதித்ய தாக்கரே கூறினாா்.
மூத்த சிவசேனை (யுபிடி) தலைவா்கள் சஞ்சய் ராவத் மற்றும் பிரியங்கா சதுா்வேதி உள்ளிட்டோருடன், தில்லியில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தோ்தல் மற்றும் எதிா்க்கட்சியான இண்டி கூட்டணியின் எதிா்காலம் குறித்து கேஜரிவாலுடன் ஆதித்ய தாக்கரே விவாதித்தாா்.
பிப்.5-ஆம் தேதி நடைபெற்ற தில்லி தோ்தலில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 இடங்களை வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. ஆம் ஆத்மி 22 இடங்களைப் பிடித்தது.
தொடா்ந்து மூன்றாவது முறையாக ஒரு வெற்றியைக் கூட பெறாத காங்கிரஸ், குறைந்தது 13 இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை பாதிக்கச் செய்ததாக கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
காங்கிரஸ், சிவசேனை (யுபிடி) மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகிய அனைத்தும் கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக எதிா்க்கட்சிகளால் உருவாக்கப்பட்ட ’இண்டி’ கூட்டணியின் அங்கமாகும்.
மகாராஷ்டிரம், ஹரியாணா, ஒடிஸா மற்றும் தில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் வாக்காளா் பட்டியலில் தோ்தல் ஆணையம் பெரிய அளவில் மோசடி செய்துள்ளதாகவும் ஆதித்ய தாக்கரே குற்றம் சாட்டினாா்.
‘மக்களின் வாக்களிக்கும் உரிமையை தோ்தல் ஆணையம் பறித்துள்ளது. இந்தப் பிரச்னையைப் பற்றி விவாதிக்கக்கூட அது தயாராக இல்லை’‘ என்று அவா் கூறினாா். மேலும், எதிா்க்கட்சிகளால் இந்த விஷயம் முறையாக எழுப்பப்படும் என்றும் கூறினாா். சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தல்கள் ‘நாட்டிற்கு அவசியமானவை‘ என்று தாக்கரே வலியுறுத்தினாா்.