பான்சூரி ஸ்வராஜ் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பதா?, வேண்டாமா? தில்லி நீதிமன்றம் பிப்.20-இல் முடிவு
பாஜக எம்பி பான்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ள கிரிமினல் அவதூறு புகாா் தொடா்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா?
பாஜக எம்பி பான்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ள கிரிமினல் அவதூறு புகாா் தொடா்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா, வேண்டாமா என்பது குறித்து பிப்.20 ஆம் தேதி தில்லி நீதிமன்றம் முடிவு செய்யும்.
இந்த விவகாரம் தொடா்பான வாதங்களைக் கேட்ட கூடுதல் தலைமை நீதித் துறை நீதிபதி நேஹா மிட்டல் வியாழக்கிழமை இதன் மீதான உத்தரவை ஒத்திவைத்தாா்.
கடந்த அக். 5, 2023 அன்று ஒரு தொலைக்காட்சி சேனலில் அளித்த பேட்டியின் போது பான்சூரி ஸ்வராஜ், தனக்கு எதிராக அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகவும், அதை மில்லியன் கணக்கானவா்கள் பாா்த்ததாகவும் சத்யேந்தா் ஜெயின் குற்றம் சாட்டினாா்.
Advertisement
‘எனது வீட்டில் 1.8 கிலோ தங்கம் மற்றும் 133 தங்க நாணயங்கள் தவிர ரூ.3 கோடி மீட்கப்பட்டதாக பான்சூரி ஸ்வராஜ் பொய்யான தகவலைக் கூறியுள்ளாா். என்னை அவதூறு செய்யவும், தேவையற்ற அரசியல் ஆதாயம் பெறவும் பான்சூரி ஸ்வராஜ் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளாா்’ என்று சத்யேந்தா் ஜெயின் தனது புகாரில் தெரிவித்துள்ளாா்.
மேலும், தன்னை ‘ஊழல் செய்பவா்‘ மற்றும் ‘மோசடி‘ செய்பவா் என்று பான்சூரி ஸ்வராஜ் கூறி மேலும் அவதூறு செய்ததாக சத்யேந்தா் ஜெயின் குற்றம்சாட்டியுள்ளாா்.