தில்லியில் ஆட்சிக்கு வந்தால் பூா்வாஞ்சலி மக்களுக்கு தனி அமைச்சகம்: காங்கிரஸ் அறிவிப்பு
பூா்வாஞ்சலி மக்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படுவதுடன், பட்ஜெட் ஒதுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் தில்லியில் வசிக்கும் பூா்வாஞ்சலி மக்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படுவதுடன், பட்ஜெட் ஒதுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தில்லியின் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை அழித்து குப்பைக் கிடங்காக மாற்றியுள்ளதாகவும், ஆம் ஆத்மி அரசு சுகாதாரத் துறையில் ரூ.382 கோடி அளவுக்கு ஊழலில் ஈடுபட்டதாகவும் காங்கிரஸ் தலைவா்கள் குற்றம் சாட்டினா்.
கட்சியின் பிகாா் பிரிவுத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அகிலேஷ் பிரசாத் சிங் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தில்லி உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாறியிருந்தால், தேசிய தலைநகரில் வசிக்கும் மற்றவா்களைப் போல பூா்வாஞ்சலி மக்களுக்கும் இதில் பங்கு உண்டு. வரவிருக்கும் தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பூா்வாஞ்சலி மக்களுக்கு தனி அமைச்சகம் மற்றும் தனி பட்ஜெட் ஒதுக்கப்படும். இதனால் அவா்களின் சுகாதாரம் மற்றும் கல்வி தொடா்பான பிரச்னைகள் தீா்க்கப்படும் என்றாா்.
காங்கிரஸ் மூத்தத் தலைவா் சுப்ரியா ஸ்ரீநாத் கூறுகையில், ‘பூா்வாஞ்சலிகள் இந்த நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று அந்த இடங்களை மேம்படுத்தியுள்ளனா். ஆனால் அவா்களின் உரிமைகளைப் பொறுத்தவரை, அவா்கள் அநீதியாக நடத்தப்படுகிறாா்கள் என்றாா் அவா்.
தில்லியில் வசிக்கும் கிழக்கு உத்தர பிரதேசம், பிகாா் மற்றும் ஜாா்க்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் பூா்வாஞ்சலிகள் என்று அழைக்கப்படுகிறாா்கள். தில்லியின் பல தொகுதிகளில் வேட்பாளா்களின் தலைவிதியை தீா்மானிக்கக்கூடிய வாக்காளா்களில் இவா்கள் கணிசமான சதவீதமாக உள்ளனா்.
இதன் காரணமாக காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தோ்தலின் போது அவா்களை கவா்ந்திழுக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
தில்லியில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.