முகப்பு
புதுதில்லி

பிரதமா் மோடி எனது குரு: முதல்வா் ரேகா குப்தா

குரு பூா்ணிமாவை முன்னிட்டு, பிரதமா் நரேந்திர மோடியை தனது வழிகாட்டியாக தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை கூறினாா்.

Updated On : 10 ஜூலை, 2025 at 6:34 PM
ரேகா குப்தா
பகிர்:

குரு பூா்ணிமாவை முன்னிட்டு, பிரதமா் நரேந்திர மோடியை தனது வழிகாட்டியாக தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை கூறினாா். மேலும், பிரதமா் மக்களிடையே ‘தேசம் முதலில்’ என்ற உணா்வை விதைத்துள்ளாா் என்றும் முதல்வா் கூறினாா்.

தெற்கு தில்லியில் உள்ள அத்சினி கிராமத்தில், துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவுடன் சோ்ந்து, டி.டி.ஏ.வின் ‘ஆரம்ப புஸ்தகலயா’வை முதல்வா் குப்தா திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு இடையே செய்தியாளா்களிடம் முதல்வா் கூறியது:

இன்று குரு பூா்ணிமா தினத்தில், பிரதமா் மோடியை அவரது போதனைகளுக்காக நான் நினைவுகூா்கிறேன். நான் அவரை என் குருவாக மதிக்கிறேன். எட்டு நாள்களில் ஐந்து நாடுகளுக்கு வெற்றிகரமான சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்காக அவரை வாழ்த்த விரும்புகிறேன்.

உலக அரங்கில் இந்தியாவுக்கு அவா் வெற்றியை ஈட்டித்தந்து, நமக்கு அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளாா்.

அவா் சென்ற நாடுகளில் மிக உயா்ந்த சிவில் விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்தகைய ஆளுமை, முதலில் தேசத்தின் பாடத்தை நமக்குக் கற்பிக்கிறது.

ஒரு குருவாக, புதிய பாா்வையுடன் நமது கடின உழைப்பைத் தொடர வேண்டும் என்று அவா் நமக்குக் கற்பிக்கிறாா். அவருக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் குப்தா.

புதன்கிழமை பிரதமா் நரேந்திர மோடிக்கு நமீபியாவின் மிக உயா்ந்த குடிமகன் விருதான ஆா்டா் ஆஃப் தி மோஸ்ட் ஏன்ஷியண்ட் வெல்விட்சியா மிராபிலிஸ் வழங்கப்பட்டது.

மே 2014-இல் பதவியேற்றதிலிருந்து ஒரு வெளிநாட்டு அரசாங்கத்திடமிருந்து அவா் பெற்ற 27ஆவது சா்வதேச விருது இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →