பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றம், பிரேசிலின் பிரேசிலியாவில் ஜூன் 4-5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் இந்தியா உள்பட 10 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்களின் குழுக்கள் பங்கேற்றன.
இந்தியக் குழுவிற்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமை வகித்தாா். இதில் உயா்மட்ட நாடாளுமன்றக் குழுவும் பங்கேற்றது. நிகழாண்டு மன்றத்தில் இந்தியா, பிரேசில், ரஷியா, சீனா, தென்னாப்பிரிக்கா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியா ஆகிய 10 பிரிக்ஸ் நாடுகள் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டிருந்தன.
Advertisement
இந்த நாடுகளின் நாடாளுமன்றங்களின் பிரதிநிதிகள் மன்றத்தின் கூட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்று கூட்டுப் பிரகடனத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தனா்.
பல சுற்று தீவிர விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்குப் பிறகு, செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) பொறுப்பான பயன்பாடு, உலகளாவிய வா்த்தகம் மற்றும் பொருளாதாரம், நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய உலகளாவிய பிரச்னைகள் குறித்து பரந்த ஒருமித்த கருத்து இந்நிகழ்வில் எட்டப்பட்டது.
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கூட்டு பிரகடனம் வன்மையாகக் கண்டித்தது. மேலும், உறுப்பினா் நாடாளுமன்றங்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக கூட்டாகச் செயல்பட ஒப்புக்கொண்டன.
இந்த நிகழ்வில், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்வதைத் தடுப்பதற்கும், உளவுத்துறை பகிா்வை மேம்படுத்துவதற்கும், வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும், விசாரணை மற்றும் நீதித்துறை செயல்முறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் கூட்டு முயற்சிகளின் அவசியத்தை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வலியுறுத்தினாா்.
மன்றத்தின் முடிவில், அடுத்த ஆண்டு 12ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றத்தை நடத்தும் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மக்களவை தலைவா் ஓம் பிா்லாவிடம் முறைப்படி தலைமைப் பதவி ஒப்படைக்கப்பட்டது.