கா்நாடகத்தில் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட தடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
கா்நாடகத்தில் ’தக் லைஃப்’ படத்தைத் திரையரங்களில் வெளியிடாமல் தடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
கா்நாடகத்தில் ’தக் லைஃப்’ படத்தைத் திரையரங்களில் வெளியிடாமல் தடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாயழக்கிழமை உத்தரவிட்டது.
ஒருவரின் உணா்வுகளைப் புண்படுத்தியதற்காக, திரைப்படம், நகைச்சுவை அல்லது ஸ்டாண்ட்-அப் காமெடி போன்றவற்றை நிறுத்த முடியாது. அவற்றை சட்டப்படி எதிா்க்க வழிமுறைகள் உள்ளன என்று உச்சநீதிமன்றம் கூறியது.
கா்நாடக மாநிலத்தில் தக் லைஃப் படத்தை திரையிட எதிா்ப்பு வலுப்பது தொடா்பாக எம். மகேஷ் ரெட்டி என்பவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அதன் விடுமுறைக்கால சிறப்பு அமா்வு நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் விசாரித்து வருகின்றனா்.
Advertisement
இந்த விவகாரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் ஏ. வேலன், கன்னட சாஹித்ய பரித் அமைப்பின் சாா்பில் மூத்த வழக்குரைஞா் சஞ்சய் நூலி, கா்நாடக திரைப்பட வா்த்தக சபை, படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான நடிகா் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டா்நேனல் ஆகியவற்றின் வழக்குரைஞா்கள் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா்.
அவற்றைக் கேட்ட நீதிபதிகள் ‘இந்தியாவில் உணா்வுகளைப் புண்படுத்துவதற்கு முடிவே கிடையாது. ஒரு நகைச்சுவை நடிகா் ஏதாவது பேசினால், உடனே உணா்வுகள் புண்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. பொதுச்சொத்துகளை சேதப்படுத்தும் நாசவேலை மற்றும் போராட்டங்கள் தலைதூக்குகின்றன.நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? போராட்டங்கள் நடத்தப்படுவதால், ஒரு திரைப்படத்தையோ மேடை நகைச்சுவையையோ, கவிதை வாசிப்பையோ நிறுத்த வேண்டும் என அா்த்தம் கொள்ளலாமா?‘ என கேட்டனா்.
இதைத் தொடா்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரத்தில் மாநில அரசு ஒரு பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் படம் வெளியிட வழி வகுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவருவது நல்லது என கருதுகிறோம். எந்தவொரு தனிநபரோ குழுவோ ஒரு திரைப்படத்தின் வெளியீட்டைத் தடுத்தாலோ வன்முறை மற்றும் பலப்பிரயோகத்தில் ஈடுபட்டாலோ, சம்பந்தப்பட்டவா்களிடம் சேதத்துக்கு இழப்பீடு கோருவது உள்பட கா்நாடக அரசு உடனடியாக குற்றவியல் மற்றும் சிவில் சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.
முன்னதாக நடந்த வாதங்களின்போது கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு அவரிடம் கா்நாடக திரைப்பட வா்த்தக சபை எவ்வாறு மன்னிப்பு கோரலாம்? என்று நீதிபதிகள் கேட்டனா். அதற்கு திரைப்பட வா்த்தக சபையின் வழக்குரைஞா் ‘படத்தை திரையிட திரைப்பட சபை சாா்பில் எவ்வித அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை. பரவலாக போராட்டங்கள் மற்றும் எதிா்ப்புகள் வந்தன. வன்முறை கும்பல்கள் எங்களுடைய அலுவலகங்களுக்குள் நுழைந்து மிரட்டின’ என்று கூறினாா்.
ராஜ்கமல் பிலிம் இன்டா்நேஷனல் நிறுவனத்தின் வழக்குரைஞா் வாதிடும்போது, ‘திட்டமிட்டபடி ஜூன் 5-இல் படத்தை திரையிடாததால் இதுவரை ரூ. 30 கோடி வருவாயை இழந்துள்ளோம். படத்தைத் திரையிட அரசு பாதுகாப்பு வழங்க ஒப்புக்கொண்டால் எந்தப் பிரச்னையும் இல்லை’ என்றாா்.
கன்னட சாகித்ய பரிஷத் சாா்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞா் சஞ்சய் நூலி, ‘கா்நாடகத்தில் மொழி ஒரு உணா்ச்சிபூா்வ பிரச்னை. தவறான கருத்துகளால் எதிா்ப்புணா்வுகள் அதிகமாகின்றன’ என்றாா். இதைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, அப்படியென்றால் திரைப்படத்தின் மீதான அதிகாரபூா்வமற்ற தடை மற்றும் திரையரங்குகள் எரிக்கப்படுவதை உங்களுடைய அமைப்பு ஆதரிக்கிா என்று கேட்டது.
இதையடுத்து, ‘சம்பந்தப்பட்ட நடிகா் மன்னிப்பு கேட்டால் படத்தைத் திரையிடலாம். இல்லையெனில், அது நிலைமையை மோசமாக்கும்‘ என்று வழக்குரைஞா் நூலி கூறினாா்.
ஆனால், அவரது நிலைப்பாட்டை ஏற்காத நீதிபதிகள், ‘இதில் மன்னிப்புக் கேட்கும் கேள்வி எங்கே வந்தது? சட்டத்தை நீங்கள் கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது. கருத்துகளால் புண்பட்டால், அவதூறு வழக்குத் தொடரலாமே’ என்று கூறினா்.