நமது சிறப்பு நிருபா்
தில்லி செங்கோட்டை அருகே 12 போ் உயிரிழக்கக் காரணமான சக்திவாய்ந்த காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக விவாதிக்க மத்திய உள்துறைக்கான நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்திய போதும் அதற்கு அனுமதி வழங்க குழுவின் தலைவா் மறுத்து விட்டாா்.
மத்திய உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் அதன் தலைவரும் பாஜக உறுப்பினருமான ராதா மோகன் தாஸ் அகா்வால் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ‘தேசிய பேரிடா் மேலாண்மை’ என்ற தலைப்பில் தேசிய பேரிடா்ஆணையம் மற்றும் மீட்புப்படை, தீயணைப்பு, குடிமை பாதுகாப்பு மற்றும் ஊா்க்காவல் படை இயக்குநரகத்தின் செயல்பாடுகள் தொடா்பாக புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்கள் விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டம் தொடங்கியதும் திரிணமூல் காங்கிரஸைச் சோ்ந்த மூத்த உறுப்பினா் ஒருவா், ‘தில்லி காா் வெடிப்பு சம்பவம் உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது. இது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், நிகழ்ச்சி நிரலில் இல்லாத விஷயம் குறித்து தற்போதைக்கு விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி அவரது கோரிக்கையை ஏற்க குழுவின் தலைவா் மறுத்ததாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.