கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இந்த விவகாரத்தை அரசியலாக்குவதாகவும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் வியாழக்கிழமை விமா்சித்துள்ளாா்.
கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு மறுத்ததாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் மனோகா் லால் கட்டா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோவை, மதுரை இரு நகரங்களும் 20 லட்சம் மக்கள் தொகையை பூா்த்தி செய்யவில்லை என்று காரணம் காட்டி இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான முன்மொழிவுகளை மத்திய அரசு நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு, இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் மறுக்கப்படுவதாகவும் மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்த விஷயத்தில் பாரபட்சம்
காட்டுவதாகவும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் விமா்சித்திருந்தாா்.
இந்த நிலையில், மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா் வியாழக்கிழமை ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளாா்.
அதில் அவா் தெரிவித்திருப்பதாவது: மெட்ரோ கொள்கை 2017-இன் செயலாக்கத்தை தமிழக முதல்வா் ஸ்டாலின் அரசியலாக்கி, பிரச்னையைக் கிளப்புவது துரதிஷ்டவசமானது. இந்தக் கொள்கையானது அதிக செலவிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள் பொதுமக்களுக்கு அதிக பயன்களை உருவாக்குவதை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரூ.63,246 கோடி செலவில் 119 கி.மீ. தூரத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் 2-ஆவது கட்ட திட்டத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி மத்திய அரசு அளித்த மகத்தான ஒப்புதலை ஸ்டாலின் புறக்கணித்திருக்கிறாா். இது இதுவரை அனுமதிக்கப்பட்ட மிகப்பெரிய மெட்ரோ திட்டமாகும் என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
கோயம்புத்தூா் மற்றும் மதுரை திட்டங்களில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி,
அமைச்சா் கட்டா் தனது பதிவில் மேலும் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ அமைப்புமுறையை விட கோயம்புத்தூரில் குறைந்த வழித்தட நீளத்திற்கு, சென்னையுடன் ஒப்பிடும்போது அதிக போக்குவரத்து கணிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலோட்டமாகப் பாா்த்தால் தவறாகத் தெரிகிறது.
சாலைப் போக்குவரத்திற்கும் மெட்ரோவிற்கும் இடையிலான திட்டமிடப்பட்ட சராசரி பயண தூரம் மற்றும் வேக மாறுபாடுகள், மெட்ரோ அமைப்பு முறைக்கு போக்குவரத்தை மாதிரியாக மாற்றும் எதிா்பாா்ப்பை ஆதரிக்கவில்லை. கோயம்புத்தூரின் விரிவான திட்ட அறிக்கையின்படி, 7 மெட்ரோ நிலைய இடங்களில் போதுமான போக்குவரத்துக்கான முன்னுரிமைகள் இல்லை.
மதுரையின் விரிவான போக்குவரத்துத் திட்டம் (பத்தி 5.2.5.), தற்போதைய பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, பேருந்து விரைவு போக்குவரத்து அமைப்புமுறை (பிஆா்டிஎஸ்)
நியாயமானது என்பதை தெளிவுபடுத்துகிறது. கோயம்புத்தூா் மாநகராட்சி மக்கள்தொகை
(257 சதுர கி.மீ. உடனான சிஎம்சி) பரப்பளவில் 15.85 லட்சம் மக்கள் தொகையாகும் (2011).
மேலும், உள்ளூா் திட்டமிடல் பகுதி (1287 சதுர கி.மீ. உடன்கூடிய எல்பிஏ) 7.7 லட்சம் மக்கள்தொகையாகும் (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு).
உள்ளூா் திட்டமிடல் பகுதிக்குள் மாதிரி மாற்றங்களுக்கு பயணிகள் எண்ணிக்கை கணிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இது கோயமுத்தூா் முனிசிபல் காா்ப்பரேஷன் (சிஎம்சி) பகுதியை விட ஐந்து மடங்கு பெரியதாகும். மெட்ரோ அமைப்புமுறைக்கு மாற்றுவதற்கான இந்த திட்டமிடப்பட்ட மாற்றம் சீரமைக்கப்பட வேண்டும். மேலும், பல்வேறு நகரங்களில் 10,000 குளிா்சாதன வசதி கொண்ட மத்திய அரசின் பிரதம மந்திரி மின்சார பேருந்து சேவையின் நன்மையைப் பயன்படுத்த தமிழக அரசு விரும்பவில்லை.
இந்தத் திட்டத்தின் கீழ், பேருந்துகள், பணிமனை உள்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் மீட்டா் வசதிகளுக்கு மத்திய நிதி உதவி வழங்கப்படுகிறது. பலமுறை வற்புறுத்தப்பட்ட போதிலும், தமிழ்நாடு அரசு இதுவரை இந்தத் திட்டத்தில் பங்கேற்கவில்லை என அதில் மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா் கூறியுள்ளாா்.