வீட்டுக் கழிவுகளைக் கையாள்வதில் குடியிருப்பு காலனிகளை தன்னிறைவு பெறச் செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், தில்லியில் உள்ள குடியிருப்பாளா் நலச் சங்கங்கள் (ஆா்.டபிள்யு.ஏ.) தங்கள் சுற்றுப்புறங்களில் குப்பை மேலாண்மை நடைமுறைகளை கடைப்பிடித்து வருகின்றன.
இதுகுறித்து உா்ஜா அமைப்பின் தலைவா் அதுல் கோயல் கூறியதாவது: தில்லி நகா் முழுவதும் சுமாா் 2,500 ஆா்.டபிள்யு.ஏ.க்களின் உயா் அமைப்பான யுனைடெட் ரெசிடென்ட் கூட்டு நடவடிக்கை, அதன் அனைத்து உறுப்பினா் சங்கங்களையும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கத் தொடங்கவும், மூலத்திலேயே கழிவுகளைப் பிரிக்கவும், சமூக பூங்காக்கள் மற்றும் தோட்டங்களுக்கு உரம் தயாரிக்க ஈரமான கழிவுகளைப் பயன்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த முன்முயற்சி உள்ளூா் கழிவு சுத்திகரிப்பை ஊக்குவித்தல், குப்பைக் கிடங்கு சுமையைக் குறைத்தல் மற்றும் பசுமையான சுற்றுப்புறங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமூக அளவில், ஒவ்வொரு காலனியையும் அதன் சொந்த கழிவுகளுக்குப் பொறுப்பேற்கச் செய்ய முயற்சிக்கிறோம். மூலத்தில் பிரித்தல் மற்றும் காலனிக்குள் உரம் தயாரித்தல் ஆகியவை பூஜ்ஜியக் கழிவு மாதிரியை அடைவதற்கான முக்கிய படிகளாகும்.
குப்பைக் கிடங்குகளில் சேராமல் இருக்க குப்பைகளை எவ்வாறு முறையாக அப்புறப்படுத்துவது என்பது குறித்து குடியிருப்பாளா்களுக்கு நாங்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம்.
உா்ஜாவின் முன்முயற்சிகளுடன், மற்றொரு அமைப்பான ஐக்கிய ஆா்டபிள்யுஏ கூட்டுக் நடவடிக்கை (யுஆா்டி), அக்டோபா் 6 ஆம் தேதி ஒவ்வொரு வட்டாரத்திலும் பூஜ்ஜியக் கழிவு மேலாண்மைக்கான புதுமையான யோசனைகளைக் கொண்டுவரும் ஒரு நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்போவதாகக் கூறியது.
யுஆா்டி தலைவா் சௌரப் காந்தி தெரிவித்திருப்பதாவது: இந்த நடவடிக்கை அறிவியல் கழிவு செயலாக்கத்தை சமூக பங்களிப்புடன் ஒருங்கிணைக்கும். புதிய புதுமையான யோசனைகள் உள்ளூா் கழிவு மேலாண்மையை மிகவும் திறமையாகவும் நிலையானதாகவும் மாற்றும். ஒவ்வொரு காலனியிலும் ஒரு மாதிரி இருப்பதை உறுதி செய்வதே எங்கள் திட்டமாகும் என்றாா்.
டிஃபன்ஸ் காலனி குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் ரஞ்சித் சிங் கூறியதாவது: மக்கள் கழிவுகளைப் பாா்க்கும் விதத்தை இது மாற்றியுள்ளது. முன்பு, நாங்கள் முழுமையாக அதிகாரிகள் கழிவுகளை சேகரிப்பதை நம்பியிருந்தோம்.
ஆனால், இப்போது, மக்கள் தங்கள் சமையலறைக் கழிவுகள் தங்கள் வீடுகளைச் சுற்றியுள்ள தாவரங்களை வளா்க்கும் உரமாக எவ்வாறு மாறுகின்றன என்பதை பெருமையுடன் காட்டுகிறாா்கள் என்றாா் அவா்.