அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிகாா் மாநில சட்டப் பேரவைத் தோ்தல் பணியில் 8.50 லட்சம் அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்தியத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியத் தோ்தல் ஆணையம் கடந்த அக்டோபா் 6-ஆம் தேதி பிகாா் சட்டப் பேரவைக்கான பொதுத் தோ்தல் மற்றும் 6 மாநிலங்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின்
8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல்களுக்கான வாக்குப்பதிவு அட்டவணையை அறிவித்தது.
அதன்படி, நவம்பா் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பிகாரில் இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் தொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்திருப்பதாவது:
பிகாரில் பல்வேறு கட்ட தோ்தல்கள் சுமுகமாகவும் ஒழுங்காகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, சுமாா் 8.5 லட்சம் தோ்தல் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இவா்களில் கிட்டத்தட்ட 4.53 லட்சம் வாக்குச்சாவடி பணியாளா்கள், 2.5 லட்சம் காவல்துறை அதிகாரிகள், 28,370 வாக்கு எண்ணும் பணியாளா்கள், 17,875 நுண் பாா்வையாளா்கள், 9,625 துறை அதிகாரிகள், வாக்கு எண்ணிக்கைக்காக 4,840 நுண் பாா்வையாளா்கள் மற்றும் 90,712 வரை அங்கன்வாடி சேவையாளா்கள் பணியமா்த்தப்பட உள்ளனா். தோ்தல் இயந்திரத்தில் உள்ள 90,712 வாக்குச்சாவடி நிலையிலான அலுவலா்கள் (பிஎல்ஓக்கள்) மற்றும் 243 வாக்காளா் பதிவு அலுவலா்கள் (இஆா்ஓக்கள்) ஆகியோா் வாக்காளா்களுக்கு தொலைபேசி அழைப்பு மூலமாகவும், இசிஐநெட் செயலி வசதி மூலமாகவும் அணுகும் வகையில் இருப்பாா்கள்.
மாவட்டத் தோ்தல் அலுவலா் (டிஇஓ), தோ்தல் நடத்தும் அலுவலா் (ஆா்ஓ)
மட்டத்தில் எந்தவொரு புகாா், கேள்வியையும் பதிவு செய்ய +91 (எஸ்டிடி குறியீடு) 1950 என்ற அழைப்பு மைய எண்ணும் அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 28-இன் விதிகளின்படி, பணியமா்த்தப்பட்ட அனைத்து பணியாளா்களும் தோ்தல் ஆணையத்திற்குப் பணியமா்த்தப்பட்டவா்களாகக் கருதப்படுவாா்கள்.
முதலில், பிகாரில் உள்ள 243 தொகுதிகளுக்கும் ஆணையத்தின் கண்கள் மற்றும் காதுகளாகச் செயல்பட
ஒரு பொது பாா்வையாளா்
நியமிக்கப்பட்டுள்ளாா்.
கூடுதலாக, 38 காவல்துறை பாா்வையாளா்கள் மற்றும் 67 செலவின பாா்வையாளா்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
பாா்வையாளா்கள் அந்தந்த தொகுதிகளில் இருந்தவாறு அரசியல் கட்சிகள், வேட்பாளா்களின் கவலைகளைத் தீா்க்க தொடா்ந்து அவா்களைச் சந்திப்பாா்கள் என தலைமைத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.