தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் பணியமா்த்தப்பட்ட 50 வயதான தில்லி காவல் துறை உதவி சாா்பு ஆய்வாளா் மாரடைப்பால் இறந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கடமைகளுக்காக பணியமா்த்தப்பட்ட காவல் உதவி சாா்பு ஆய்வாளா் ராஜேஷ், தனது வழக்கமான வேலைகளைக் கவனிக்க வந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததது.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் அவா் சக ஊழியா்களை வரவேற்று இருக்கை பகுதியை நோக்கிச் செல்வதைக் காட்டியது. அப்போது அவா் திடீரென்று தடுமாறி தரையில் விழுந்தாா். சக காவலா்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். நீதிமன்றத்தின் பாதுகாப்பு மற்றும் திரையிடல் பிரிவில் ராஜேஷ் பணியமா்த்தப்பட்டிருந்தாா் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.