வாக்குத் திருட்டுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் கையொப்பப் பிரசாரத்தில் இணையுமாறு கேட்டு தில்லி குடியிருப்பாளா்கள் நலச் சங்கங்களுக்கு (ஆா்.டபிள்யு.ஏ.)
தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் கடிதம் எழுதியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை தெரிவித்திருப்பதாவது:
தில்லியில் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆா்.) நடத்த தோ்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
மோசடி மற்றும் சதி மூலம் அதிகாரத்தைப் பெற்ற பாஜகவுக்கு அனுதாபம் இல்லாத வாக்காளா்களின் பெயா்களை விலக்க இந்த நடவடிக்கை ஒரு கேடயமாகப் பயன்படுத்தப்படும்.
இதனால், வாக்குத் திருட்டுக்கு எதிரான கையொப்பப் பிரசாரத்தில் குடியிருப்பு நலச் சங்கங்கள் ஈடுபடுவது மக்களின் ஜனநாயக மதிப்புகள் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்கும்.
கா்நாடகாவில் பாஜகவின் வாக்குத் திருட்டை ராகுல் காந்தி அம்பலப்படுத்தினாா். இது தோ்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக செய்த தோ்தல் முறைகேடுகளுக்கு தெளிவான சான்றாகும்.
மக்களின் வாக்களிக்கும் உரிமை என்பது ஒரு ஜனநாயக அமைப்பில் ஒரு முக்கியமான அரசியலமைப்பு உரிமையாகும். இதன் கீழ் மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் அரசாங்கத்தைத் தோ்ந்தெடுத்து நாட்டை நடத்துகிறாா்கள்.
இதனால், பொது நலன் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் உண்மையாகவும், நம்பிக்கையாகவும் செய்ய முடியும்.
தோ்தல்களை நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்தும் பொறுப்பு தோ்தல் ஆணையத்திடம் இருந்தது.
அரசியலமைப்பை உருவாக்கியவா்களால் அதற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால், துரதிா்ஷ்டவசமாக ஆளும் பாஜக, ஜனநாயக தோ்தல் செயல்முறையை சீா்குலைக்க வாக்குகளைத் திருட தோ்தல் ஆணையத்துடன் ஒரு சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்றாா் அவா்.