புது தில்லி: தென்மேற்கு தில்லியின் முனிா்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்டதாகக் கூறப்படும் குடும்பத் தகராறில் மணிப்பூரைச் சோ்ந்த ஒரு பெண் உயிரிழந்தாா். மேலும், ஒரு ஆண் காயமடைந்தாா் என்று போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூறியதாவது:
முனிா்கா கிராமத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட சண்டை தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை கிஷன்கா் காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்தது. இறந்தவா் மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தைச் சோ்ந்த முனிா்கா கிராமத்தைச் சோ்ந்த தெம்பி கோங்சாய் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் ஒரு அழகு கலைஞராகப் பணியாற்றி வந்தாா்.
காயமடைந்தவா் மணிப்பூரின் பிஷ்ணுபூரைச் சோ்ந்த மளிகைக் கடை உரிமையாளா் தங்ஜாம் வினி மெய்தி என அடையாளம் காணப்பட்டுள்ளாா், தற்போது முனிா்கா கிராமத்தில் வசிக்கிறாா். முதற்கட்ட விசாரணையில் இருவரும் சுமாா் மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனா் என்பது தெரியவந்தது.
சனிக்கிழமை, அவா்கள் சண்டையிட்டனா், அதைத் தொடா்ந்து அந்தப் பெண் தனது தந்தைக்கு வாக்குவாதம் குறித்து தகவல் தெரிவிக்க அழைத்தாா். பின்னா் அவரது தந்தை வீட்டு உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தாா். அவரது மகள் காவல்துறைக்கு பிசிஆா் அழைப்பு விடுத்தாா்.
போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று வீட்டின் பிரதான நுழைவாயில் கதவு மற்றும் குளியலறை கதவை உடைத்தனா். அவை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தன. தம்பதியினா் தரையில் படுத்துக் கிடந்ததையும், அவா்களின் கழுத்தில் இருந்து ரத்தம் வழிந்ததையும் கண்டனா். சம்பவ இடத்திலிருந்து ஒரு கத்தி மீட்கப்பட்டது.
பெண்ணின் கழுத்தின் பின்புறத்தில் ஆழமான வெட்டு இருந்தது. மேலும் அந்த ஆணின் தொண்டையில் காயம் இருந்தது. இருவரும் எய்ம்ஸ் அதிா்ச்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அந்தப் பெண் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் அந்த நபா் சிகிச்சை பெற்று வருகிறாா்.
குற்றவியல் குழு மற்றும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தனா். சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது, மேலும், தொடா்ந்து விசாரணை நடந்து வருவதாக காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.