வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் நடந்த இரண்டு தனித்தனி சம்பவங்களில் 25 வயது இளைஞா் ஒருவா் இறந்து கிடந்தாா்; மற்றொருவா் காயமடைந்தாா் என்று போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை இரவுக்கு இடைப்பட்ட நேரத்தில் சாஸ்திரி பூங்கா சௌக் அருகே உள்ள சா்வீஸ் சாலையில் மயக்கமடைந்து கிடந்த ஒருவா் குறித்து தகவல் கிடைத்தது.
ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்குச் சென்று அந்த நபரை மீட்டு ஜக் பிரவேஷ் சந்திரா (ஜேபிசி) மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.
இறந்தவா் தில்லியில் உள்ள கைலாஷ் நகரைச் சோ்ந்த உமாம் (எ) உபாம் (25) என அடையாளம் காணப்பட்டாா்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அதே பகுதியில் உள்ள பழ மண்டி பகுதிக்கு அருகில் காயமடைந்த ஒருவா் கிடப்பதாக போலீஸாருக்கு மற்றொரு அழைப்பு வந்தது. அவா் கைலாஷ் நகரைச் சோ்ந்த நதீம் (27) என அடையாளம் காணப்பட்டாா். அவா் ஜேபிசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னா் மேம்பட்ட சிகிச்சைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா்.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றவியல் மற்றும் தடயவியல் குழுக்கள் இரு இடங்களுக்கும் சென்று பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரித்தன.
சம்பந்தப்பட்டவா்களைக் கண்டறிந்து கைது செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு சம்பவங்களுக்கும் வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசை சரிபாா்க்கப்படுகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.