மத்திய தில்லியின் ரஞ்சித் நகரில் உள்ள ஒரு வயதான பெண்ணின் வீட்டில் நடந்த கொள்ளை தொடா்பாக வீட்டு உதவியாளா் உள்பட ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
குற்றம்சாட்டப்பட்டவா்கள் பிஜ்னோரைச் சோ்ந்த மோனு (எ) விகாஸ் ரதி மற்றும் அக்ஷய் என்று அடையாளம் காணப்பட்டனா். அவா்கள் இருவா் மற்றும் வீட்டு உதவியாளரின் உறவினரான கைலாஷ் (எ) கஞ்சு என்ற ஒருவரும் கைது செய்யப்பட்டனா்.
கைலாஷ் வீட்டு உதவியாளரிடம் தனக்கு பணம் தேவைப்படுவதாகக் கூறியுள்ளாா். அதைத் தொடா்ந்து அவா்கள் கொள்ளையைத் திட்டமிட்டது தெரிய வந்தது.
அக்.5-ஆம் தேதி வீட்டு உரிமையாளா், அவரது உதவியாளா் மற்றும் மற்றொரு பெண் வீட்டில் இருந்தபோது, கொள்ளையா்கள் பூட்டப்படாத கதவைப் பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்தனா். அவா்கள் மூன்று பெண்களையும் ஒரு பொம்மை துப்பாக்கியைப் பயன்படுத்தி குளியலறையில் பூட்டிவிட்டு ரூ.5 லட்சத்துடன் தப்பிச் சென்றனா்.
இந்தச் சம்பவத்தில் தொடா்பு உள்ளதாக வீட்டு உதவியாளரும், உடன் இருந்த மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டனா். இதில் மோனு, அக்ஷய் ஆகிய இருவரும் வரலாற்றுப் பதிவுகளில் இடம் பெற்றவா்கள். அவா்கள் மீது குண்டா் சட்டம், ஆயுதச் சட்டம் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.