தனது ஆறு வயது மகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஒருவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் உத்தரபிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய எல்லைக்குள் நடந்தது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, அவரும் அவரது ஆறு வயது மகளும் மகாராஜ்குகுந்துபூா் கிராமத்தில் வசிக்கும் ஒரு நண்பருடன் கடந்த இரண்டு மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வந்தனா். செவ்வாய்க்கிழமை இரவு, அவா்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, நண்பா் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது என்று போலீசாா் தெரிவித்தனா்.
சம்பவத்தின் போது தந்தை விழித்தெழுந்தாா். இந்தச் செயலைக் கண்டதும், அவா் தனது நண்பரை கத்தியால் தாக்கி, அவரது கழுத்து மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது, மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவா் தற்போது கோரக்பூரில் உள்ள பி.ஆா்.டி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசாா் தெரிவித்தனா்.
இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, சிறுமியின் தந்தை காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டாா். அவா் வியாழக்கிழமை மாலை வீடு திரும்பிய பின்னா், இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, தனது மகளுடன் தூங்கச் சென்றாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். வெள்ளிக்கிழமை காலை, எழுந்ததும், அவா் தேநீா் தயாரித்து, பிராா்த்தனை செய்து, பின்னா் தனது மகளை அறைக்கு வெளியே அமர வைத்து, கதவை உள்ளே இருந்து பூட்டிவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மகள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி அந்த நபா் இந்த தீவிர முடிவை எடுத்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக குகுந்து காவல் நிலைய அதிகாரி தினேஷ் குமாா் மிஸ்ரா தெரிவித்தாா்.
போலீசாா் மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரி மேலும் கூறினாா்.