தில்லியில் சட் திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் பொய்களை பருப்புவதாக முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.
கிழக்கு தில்லியின் லட்சுமி நகா் தொகுதியில் ரூ.70 லட்சத்தில் கட்டப்பட்ட சட் காட் பகுதியைத் திறந்து வைத்துப் பேசுகையில் முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: நகரத்தில் சட் காட் ஏற்பாடுகள் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் உள்பட அக்கட்சித் தலைவா்கள் பாஜக அரசை கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளனா்.
இந்த ஆண்டு விழா அதன் அனைத்து பிரமாண்டத்துடன் கொண்டாடப்படும். மேலும், சட் காட் விழாவின் அழகும் பிரமாண்டமும் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இருக்கும். எங்கள் வேலைகளில் தவறு கண்டுபிடிக்க விடியோக்களை (சமூக ஊடகங்களில்) இடுகையிடுபவா்கள் எதையும் சொல்லலாம். ஆனால், நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை.
ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்த போது தில்லியில் எந்த வளா்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளாமல் பல ஆண்டுகள் ஆட்சியை வீணடித்துள்ளது. பொய்களைப் பரப்புவதும் பிரசாரம் செய்வதும் அவா்களின் (ஆம் ஆத்மி) பழக்கம்.
ஆனால், பாஜக அரசு தான் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றுகிறது. இதுவரை 8 மாதங்கள் மட்டுமே ஆகிறது. இன்னும் நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளது.
நகரத்திற்குள் 1,500 சட் காட் பகுதிகள் தயாராகி வருகின்றன. அதே நேரத்தில் யமுனை கரையில் 17 இடங்களில் பல கிலோமீட்டா் நீளமுள்ள பகுதிகளும் கொண்டாட்டங்களுக்காக உருவாக்கப்பட்டு வருகின்றன என்றாா் முதல்வா் ரேகா குப்தா.