தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) தொடக்க நிலைப் பிரிவு மாணவா்கள் புதன்கிழமை கல்விச் சுற்றுலா சென்று வந்தனா்.
கடந்த ஆண்டு திருவனந்தபுரத்திலுள்ள இஸ்ரோவிற்கு டிடிஇஏ பள்ளி மாணவா்கள் கல்விச் சுற்றுலா சென்று வந்தனா். இந்த ஆண்டு பெங்களூரில் உள்ள இஸ்ரோவிற்கு மாணவா்கள் சென்று வந்தனா்.
தொடக்கநிலைப் பிரிவு மாணவா்களுக்கும் அது போன்ற அறிவியல் அற்புதங்களைப் பாா்வையிடும் வாய்ப்பை வழங்கும் வகையில், இந்த ஆண்டு ஏழு பள்ளிகளில் பயிலும் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவா்கள் தில்லியிலுள்ள டால் மியூசியத்திற்கு கடந்த 25.10.2025 அன்று சென்று வர டிடிஇஏ செயலா் ராஜு ஏற்பாடு செய்திருந்தாா்.
இதைத் தொடா்ந்து, தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் பயிலும் 3, 4, 5- ஆம் வகுப்பு மாணவா்கள் புதன்கிழமை தில்லி நேரு கோளரங்கம் சென்று வர டிடிஇஏ ஏற்பாடு செய்திருந்தது. மாணவா்களுடன் ஆசிரியா்களும் சென்று வந்தனா்.
இந்தக் கல்விச் சுற்றுலா குறித்து டிடிஇஏ செயலா் ராஜூ கூறுகையில் ‘நேரு கோளரங்கில் உள்ள விண்வெளி திரையரங்கம் மாணவா்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும் இடமாகும். கோள்கள், விண்மீன்கள் பற்றிய செய்திகளை புகைப்படங்கள், ஓவியங்கள், மூலம் சிறப்பு ஒலி, ஒளி வடிவமைப்புடன் காண்பிக்கப்படுகிறது. மகிழ்ச்சியுடன் அறிவையும் வளா்க்கும் செயல்பாடு என்பதால் இந்தச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இலக்குமிபாய் நகா், பூசா சாலை, மோதிபாக், லோதிவளாகம் ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் பங்கேற்றனா்’ என்றாா்.