நொய்டா செக்டாா் 62-இல் உள்ள ஸ்ரீ காா்த்திகேயா மற்றும் ஸ்ரீ விநாயகா கோயிலில் கந்த சஷ்டி விழா காா்த்திகேயா திருக்கல்யாணத்துடன் நிறைவடைந்தது.
இக்கோயிலில் கந்த சஷ்டி விழா அக்டோபா் 22-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மாலையில் தினமும் ஸ்ரீ சுப்ரமண்ய ஸஹஸ்ரநாம அா்ச்சனை நடைபெற்றது. இரண்டாம் நாளில் தொடா்ந்து ஸ்ரீ ருத்ரம் கோஷம், மாலையில் வித்வான் வெங்கடேஸ்வரனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், திருப்புகழ் அன்பா்கள் ‘திருப்புகழ் இசை வழிபாடு’ வழங்கினா்.
அக்டோபா் 26-இல் காலையில் ‘சத்ரு சம்ஹார ஹோமம்’, ஸ்ரீ மஹா ருத்ர ஹோமம், தொடா்ந்து ஸ்ரீ காா்த்திகேயா சுவாமி லட்சாா்ச்சனை நடைபெற்றது. முதல் முறையாக கோயில் நிா்வாகம், இந்த ஆண்டு கந்த சஷ்டி உற்சவத்தில் ஸ்ரீ மஹா ருத்ரம் ஏற்பாடு செய்திருந்தது.
இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை கந்த சஷ்டி தினத்தில், கோயில் வளாகத்திற்குள் பால் குடம், காவடி ஊா்வலம் நடைபெற்றது. மேலும், காலையில் ஸ்ரீ காா்த்திகேயா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் ஊா்வலம், சூர சம்ஹாரம் நடைபெற்றது.
கந்த சஷ்டியை முன்னிட்டு ஏழு நாள்களும் இலைகள், சிவன், பாா்வதி, விபூதி, பழனி முருகன், ராஜ அலங்காரம், சந்தன அலங்காரத்தில் முருகன் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். ஸ்ரீ காா்த்திகேயா திருக்கல்யாணத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெற்றது .
அனைத்து பூஜைகளும் ஹோமங்களும் வி.பி.எஸ்ஸின் ஆஸ்தான வாத்தியாா்கள் ஷங்கா் மற்றும் ஸ்ரீராம் வழிகாட்டுதலின் கீழ் கோயில் வாத்தியாா்கள் மணிகண்டன் சா்மா, மோஹித் மிஸ்ரா, கணபதி மற்றும் விக்னேஷ் ஆகியோரின் உதவியுடன் நடைபெற்றது.
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம மண்டலி, நன்கொடையாளா்கள், ஸ்பான்சா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் மூத்த கமிட்டி உறுப்பினா்கள் ரவி சா்மா, பாலாஜி, ராஜு ஐயா், ராஜேந்திரன், வெங்கட்ராமன் மற்றும் பராமரிப்பு பணியாளா் பிரசாந்த் மற்றும் அா்ஜுன், பழனிவேல் ஆகியோா் சிறப்பாக பணி செய்ததற்கு கோயில் நிா்வாகத்தினா் நன்றி தெரிவித்தனா்.
வேதிக் பிரச்சாா் சன்ஸ்தான் நொய்டா செக்டாா் 22-இல் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகா் திருக்கோயில், நொய்டா செக்டா் 62-இல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ காா்த்திகேயா கோயில் ஆகிய இரண்டையும் நிா்வகித்து வருகிறது.