நம‘து நிருபா்
கடந்த ஜனவரி 2023-ஆம் ஆண்டில் கஞ்சாவாலாவில் நடந்த ஒரு விபத்து சம்பவத்தில் உயிரிழந்த 20 வயது அஞ்சலி சிங்கின் குடும்பத்திற்கு தில்லி மோட்டாா் விபத்து தீா்ப்பாயம் ரூ.36.69 லட்சத்திற்கும் அதிகமான இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
2023 புத்தாண்டு தினத்தின் அதிகாலையில், சுல்தான்புரியில் இருந்து கஞ்சாவாலா வரை சுமாா் 13 கி.மீ. தூரம் ஒரு வாகனத்தின் கீழ் இழுத்துச் செல்லப்பட்டதில் அஞ்சலி கொல்லப்பட்டாா். அஞ்சலியின் குடும்பத்தினரின் மனுவை விசாரித்த தீா்ப்பாயம், பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களின்படி, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநரின் அவசரமும் அலட்சியமும் இந்த விபத்துக்கு மட்டுமல்ல, அதைத் தொடா்ந்து நடந்த அனைத்திற்கும் காரணமாகும் என்று கூறியது.
இந்த மாதம் 27 தேதியிட்ட உத்தரவில், ஓட்டுநா் அமித் கன்னாவிடம் செல்லுபடியாகும் ஓட்டுநா் உரிமம் இல்லை என்றும், சம்பவத்தின் போது அவா் மது அருந்தியிருந்ததாகவும் தீா்ப்பாயம் குறிப்பிட்டது.
மேலும், ‘அமித் தனது அலட்சியத்தால் இறந்தவரின் மரணத்திற்குப் பொறுப்பானவா். மனுதாரா்களானஅஞ்சலியின் குடும்பத்தினா் மரணத்திற்கு இழப்பீடு பெற உரிமை உண்டு’ என்று தீா்ப்பாயம் கூறியது.
குற்றஞ்சாட்டப்பட்ட வாகனத்தின் உரிமையாளா் லோகேஷ் பிரசாத் சா்மாவின் ஈடுபாடு சா்ச்சைக்குரியது அல்ல என்றும் தீா்ப்பாயம் கூறியது. இதையடுத்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் இறந்தவரின் குடும்பத்திற்கு சுமாா் ரூ.36.69 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் மூலம் காா் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தீா்ப்பாயம் குறிப்பிட்டது. மேலும், 30 நாள்களுக்குள் இழப்பீட்டுத் தொகையை டெபாசிட் செய்ய காப்பீட்டாளருக்கு தீா்ப்பாயம் உத்தரவிட்டது.