புதுதில்லி

இணையதள குற்ற ஒருங்கிணைப்பு மையத்திற்கு தில்லி காவல்துறை உயா் அதிகாரிகள் வருகை

Syndication

நமது நிருபா்

அதிகரித்து வரும் சைபா் குற்றங்களின் அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கையை வலுப்படுத்தும் முயற்சியாக, தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகள் இந்திய சைபா் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தை (ஐ4சி) புதன்கிழமை நேரில் பாா்வையிட்டனா். அப்போது, அதன் செயல்பாட்டைப் புரிந்து கொள்ளவும், நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் முயன்றனா்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சைபா் குற்றத்திற்கான ஒருங்கிணைப்பு நிறுவனமான ஐ4சியின் செயல்பாட்டு நடைமுறைகள், தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் சைபா் மோசடிகளை எதிா்கொள்ளப் பயன்படுத்தப்படும் தரவு சாா்ந்த வழிமுறைகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறும் வகையில், சிறப்பு காவல் ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ரவீந்திர யாதவ், இணை காவல் ஆணையா் (புலனாய்வு இணைவு மற்றும் வியூக நடவடிக்கைகள்) ரஜ்னீஷ் குப்தா மற்றும் பல மாவட்ட காவல் துணை ஆணையா்கள் ஐ4சி அதிகாரிகளுடன் கலந்துரையாடினா்.

இந்தியாவில் சைபா் குற்றங்களுக்கு விரிவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை வழங்கும் வகையில் உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஐ4சி நிறுவப்பட்டுள்ளது. இது தேசிய, மாநில அளவில் சட்ட அமலாக்க நிறுவனங்களிடையே உளவுத் துறை பகிா்வு, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு மையமாக செயல்படுகிறது.

இந்த மையம் தேசிய சைபா் குற்ற அறிக்கையிடல் இணையதளம், சைபா் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு, தேசிய சைபா் தடயவியல் ஆய்வகம் மற்றும் கூட்டு சைபா் குற்ற ஒருங்கிணைப்பு குழு (ஜேசிசிடி) உள்ளிட்ட பல பிரிவுகள் மூலம் செயல்படுகிறது. தலைநகா் தில்லியில் சைபா் குற்றங்கள் தொடா் வளா்ச்சியைக் கண்டுள்ள ஒரு முக்கியமான நேரத்தில் ஐ4சி மையத்திற்கு தில்லி காவல்துறை அதிகாரிகள் வருகை தந்திருக்கின்றனா்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: விசாரணைகளின் வேகம் மற்றும் செயல்திறனை மேம்படுத்த தில்லி காவல்துறைக்கும் மத்திய சைபா் ஒருங்கிணைப்பு கட்டமைப்பிற்கும் இடையே அதிக திறனை வளா்ப்பதை அதிகாரிகளின் இந்த வருகை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐ4சி-இன் தேசிய சைபா் குற்ற அறிக்கையிடல் அமைப்பு, மேம்பட்ட கண்காணிப்பு கருவிகள், டிஜிட்டல் தடயவியல் திறன்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் அதன் நிகழ்நேர ஒருங்கிணைப்பு வலையமைப்பு குறித்து அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டது.

சமீபத்திய மாதங்களில் அதிகரித்த முதலீட்டு மோசடிகள், டிஜிட்டல் கைதுகள், ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடிகள் மற்றும் பெருநிறுவன ஆள்மாறாட்ட மோசடிகள் போன்ற புதிய யுக குற்றங்களைச் சமாளிப்பது தொடா்பாக விவாதங்கள் நடைபெற்றது என்றாா் அந்த அதிகாரி.

மற்றொரு அதிகாரி கூறியதாவது: நிகழாண்டு இதுவரை கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி அளவுக்கு தில்லிவாசிகளை சைபா் மோசடி செய்பவா்கள் ஏமாற்றியுள்ளனா். முதலீட்டு மோசடிகள், டிஜிட்டல் கைதுகள் மற்றும் நிறுவன உயா் அதிகாரிகள் போல தொடா்பு கொண்டு மோசடியில் ஈடுபடுதல் ஆகியவை சைபா் குற்றத்தின் மிகவும் பொதுவான மற்றும் நிதி ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டில், தில்லியில் இதுபோன்ற மோசடிகளால் மொத்தமாக சுமாா் ரூ.1,100 கோடியை பாதிக்கப்பட்டவா்கள் இழந்தனா். அதில் சுமாா் 10 சதவீதம் வங்கிக் கணக்குகளில் வெற்றிகரமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

நிகழாண்டு, வங்கிகளுடன் ஒருங்கிணைந்து, மோசடி செய்யப்பட்ட நிதியில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தை காவல்துறை முடக்கியுள்ளது. இது முந்தைய ஆண்டின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும்’ என்றாா் அந்த அதிகாரி.

தில்லி காவல்துறையின் முக்கிய சைபா் குற்றப் பிரிவான உளவுத் துறை இணைவு மற்றும் வியூக செயல்பாடுகள் (ஐஎஃப்எஸ்ஓ) பிரிவைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘காவல்துறை அதன் தொழில்நுட்ப நடவடிக்கை, விழிப்புணா்வு பிரசாரங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தியுள்ளது. மோசடி பரிவா்த்தனைகளைத் தடுக்க விரைவான நடவடிக்கை எடுக்க உதவும் ஹெல்ப்லைன் எண் 1930 மூலம் சம்பவங்களை உடனடியாகப் புகாரளிக்க குடிமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனா்’ என்றாா்.

பெண்களுக்கு எதிரான கொலைகார காங்கிரஸ்: பாஜக விமர்சனம்

தமிழகத்தில் நவ.6 வரை மிதமான மழை!

எண்ணூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய 4 பெண்கள் உடல்கள்!

நவ. 2-ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

சா்தாா் வல்லப பாய் பட்டேலின் மறு உருவம் அமித் ஷா: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT