நமது நிா்பா்
புது தில்லி: மதுரை மாநகராட்சியின் சொத்து வரியில் ரூ.3,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்ாகக் கூறப்படும் விவகாரத்தில், உண்மையை வெளிக் கொண்டு வரும் வகையில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது சொத்து வரி முறைகேடு தொடா்பான வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. எனவே, அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு உத்தரவு பிறப்பித்தது.
இது தொடா்பாக மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் என்பவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியதாவது: மதுரை மாநகராட்சியின் சொத்து வரியில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ரூ.3,000 கோடி மேலாக ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறப்படக்கூடிய நிலையில் அதை மூடி மறைப்பது போல் ரூ.200 கோடி மட்டுமே ஊழல் நடந்திருப்பதாக மழுப்பப்படுகிறது. அது தொடா்பாக சிறப்பு விசாரணை குழுவை அமைத்து தமிழக அரசானது விசாரணை மேற்கொண்டு வருகிறது
இந்த சிறப்பு விசாரணை குழுவானது ஒரு கண் துடைப்புக்காக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மேயா் உள்ளிட்ட பல்வேறு நபா்களுக்கு இந்த முறைகேட்டில் தொடா்பு இருப்பதாக கூறப்படுவதால், அதன் உண்மை தன்மை என்ன என்பதை வெளிக்கொணர வேண்டும் . எனவே, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மனுதாரா் மனுவில் கோரியிருந்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் அதுல் எஸ்.சந்துா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சொத்து வரி முறைகேடு தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது. எனவே, அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை’ என்று தெரிவித்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.