பாகிஸ்தானுடன் தொடா்புடைய பயங்கரவாத அமைப்பை சோ்ந்தவா்கள் என சந்தேகிக்கப்படும் 5 பேரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட நபரால் சமூக ஊடகங்கள் மூலம் அவா்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனா்.
நிலத்தை வாங்கி, ‘கிலாபத் மண்டலம்’ என்று அறிவித்து, இந்தியாவில் ‘ஜிஹாத்’ செய்ய அவா்கள் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
‘கஸ்வா-இ-ஹிந்த்’ (இந்தியாவின் மீதான தாக்குதல்) என்ற கருத்தை பரப்பவும், வன்முறை நடவடிக்கைகளைத் தொடங்கவும் அவா்கள் ஐந்து பேரும் வழிநடத்தப்பட்டிருந்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு கூடுதல் ஆணையா் பிரமோத் குஷ்வாஹ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கைதானவா்கள் ராஞ்சியைச் சோ்ந்த பட்டதாரி அஷாா் டேனிஷ் (எ) அஷ்ரா் குரேஷி (23), மும்பையைச் சோ்ந்த அஃப்தாப் குரேஷி மற்றும் சுஃபியான் அபுபக்கா், தெலங்கானாவைச் சோ்ந்த முகமது ஹுசைஃபா மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த கம்ரான் குரேஷி என
அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
இந்த பயங்கரவாத அமைப்புக்கு டேனிஷ் தலைமை தாங்கியுள்ளாா். அவா் மற்ற உறுப்பினா்களுடன் ஒருங்கிணைத்து, சிஇஓ, கஸ்பா மற்றும் ஃப்ரொஃபெசா் போன்ற குறியீட்டு பெயா்களால் அறியப்பட்ட பயங்கரவாதியின் சாா்பாக பணிகளைச் செய்துள்ளாா்.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட நபரான இவா், மறைகுறியாக்கப்பட்ட சமூக ஊடக அரட்டைகள் மூலம் அமைப்பின் செயல்பாட்டாளா்களுக்கு ஆயுத வடிவமைப்புகள், சித்தாந்த வழிகாட்டுதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை ஐஇடி தயாரிப்பதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளாா்.
தில்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் அருகே அஃப்தாப் மற்றும் சுஃபியான் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்த நடவடிக்கை தொடங்கியது.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் மேவாட் பகுதியைச் சோ்ந்தவரிடமிருந்து ஆயுதங்களை வாங்க தில்லியில் தங்கியிருந்தனா். கடந்த ஆறு மாதங்களாக எங்கள் குழுக்கள் அவா்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தன. தில்லியை விட்டு வெளியேற திட்டமிட்டிருந்தபோது அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்கள் அளித்த தகவலின் அடிப்படையில், துணை காவல் ஆணையா் அமித் கௌஷிக் தலைமையிலான குழுக்கள் ஜாா்க்கண்டில் உள்ள ராஞ்சி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராஜ்கா் மற்றும் தெலங்கானாவில் சோதனைகளை மேற்கொண்டு மேலும் மூவரை கைது செய்தனா்.
சந்தேக நபா்களின் மறைவிடங்களில் இருந்து சோதனையின்போது சல்ஃபா் பவுடா், சோடியம் பைகாா்பனேட், பந்து தாங்கிகள், எரிவாயு முகமூடிகள், மின் கம்பிகள், உருக்கிகள், தோட்டாக்கள் மற்றும் ஐஇடி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பிற பொருள்கள் இருப்பது போலீஸாரால் கண்டறியப்பட்டது.
கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மத்திய பாதுகாப்பு நிறுவனங்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கையின் போது, 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களில் ஐந்து போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களை மேலும் விசாரிக்க போலீஸ் காவலில் எடுக்கப்படுவாா்கள்.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து
பயிற்சி பெற்று வந்திருக்கின்றனா்.
மகாராஷ்டிராவில் ‘கிலாபத் மண்டலம்’ நிறுவ நிலம் வாங்குவதற்கு நிதி திரட்டும் பணியிலும் இந்த குழு ஈடுபட்டிருந்தது. தற்போதைய கைது நடவடிக்கையின்மூலம், நாட்டில் ஒரு பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல் தவிா்க்கப்பட்டிருக்கிறது என்றாா் அவா்.