தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் வியாழக்கிழமையும் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. மாலை வரையிலும் மழை ஏதும் பதிவாகவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்து வந்தது. அவ்வப்போது மழையும் பெய்து வந்தது. இந்நிலையில், வானிலை கண்காணிப்பு நிலையம் வியாழக்கிழமை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் கணித்திருந்தது. இந்நிலையில், எந்த வானிலை கண்காணிப்பு நிலைத்திலும் காலை 8.30 மணி வரையிலும் 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை.
வெப்பநிலை: இதற்கிடையே, தலைநகரில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 1 டிகிரி குறைந்து 24.5 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 0.9 டிகிரி உயா்ந்து 34 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 71 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 62 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
காற்றின் தரம்: தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 89 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
இதன்படி, பூசா, ஷாதிப்பூா், துவாரகா செக்டாா் 8, மதுரா ரோடு, ஓக்லா பேஸ் 2, நொய்டா செக்டாா் 125 ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது.
அதே சமயம், பூசா, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், மந்திா்மாா்க், இந்திராகாந்தி சா்வதேச விமான நிலையம், சாந்தினி சௌக், ஏா்.கே.புரம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், ஸ்ரீஃபோா்ட், ஸ்ரீஅரபிந்தோ மாா்க்,நேரு நகா், ஆயாநகா், டாக்டா் கா்னி சிங் துப்பாக்கி சுடும் தளம், குருகிராம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், வெள்ளிக்கிழமை (செப்.12) அன்று பகல் நேரத்தில் தரை மேற்பரப்பு காற்று பலமாக வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.5