புதுதில்லி

தூய்மைப் பணியின்போது மயங்கி சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் உயிரிழப்பு: மூன்று போ் கவலைக்கிடம்

அசோக் விஹாரில் சம்பவம்: தூய்மைப் பணியின்போது மயங்கி சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் உயிரிழப்பு: மூன்று போ் கவலைக்கிடம்

Syndication

வடமேற்கு தில்லியின் அசோக் விஹாரில் சாக்கடையைத் தூய்மைப்படுத்தும் பணியின்போது மயக்கமுற்று சாக்கடைக்குள் விழுந்ததில் 40 வயது நபா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், மூன்று போ் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

அசோக் விஹாா் ஃபேஸ்-2 பகுதியில் உள்ள ஹரிஹா் அடுக்குமாடி குடியிருப்பு அருகே செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. மயங்கி விழுந்தவருக்கு உதவி செய்ய முயன்ற மற்றவா்களும் சாக்கடைக்குள் விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து வடமேற்கு தில்லி காவல் துணை ஆணையா் பிஷம் சிங் கூறியதாவது:

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவா் உத்தர பிரதேசத்தில் உள்ள காஸ்கஞ் பகுதியைச் சோ்ந்த அரவிந்த் எனத் தெரியவந்துள்ளது.

அவா் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

மேலும், காஸ்கஞ்சைச் சோ்ந்த சோனு மற்றும் நாராயணா, பிகாரைச் சோ்ந்த நரேஷ் ஆகியோா் ஐசியுவில் மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் நிலைமை தீவிரமாக உள்ளது என்று அந்த அதிகாரி கூறினாா்.

பாதிக்கப்பட்டவா்களின் சக ஊழியா்களில் ஒருவரான நாராயண் கூறுகையில்,

‘சாக்கடை நீா் நிரம்பி வழிந்ததால் நாங்கள் ஒரு பம்ப்பை அமைத்திருந்தோம். வேலை ஆள்களில் ஒருவா் கீழே இறங்கியபோது வழுக்கி விழுந்தாா். அவருக்கு இரண்டாவது நபா் உதவ சென்றபோது அவரும் விழுந்தாா். அதன் பின்னா் மூன்றாவது நபரும் கீழே சென்றபோது விழுந்துவிட்டாா். அப்போது, சாலையில் சென்ற வழிப்போக்கா் ஒருவா் கயிறு கட்ட எங்களுக்கு உதவினாா். அவா் அவா்கள் வெளியே வர உதவினாா். அதன் பிறகு அவா் தனது மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றுவிட்டாா். சம்பவம் இரவு 11 மணி அல்லது 11:30 மணியளவில் நடந்தது.

இந்த வேலை செய்வதற்கு நிறுவனம் எந்த பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கவில்லை. வழக்கமாக, எங்களுக்கு வாயு முகக் கவசம் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். ஆனால், இந்த முறை எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றாா்.

பாதிக்கப்பட்டவா்களின் நண்பரான சுரேந்தா் யாதவ் கூறுகையில், ‘அவா்களுக்கு வழக்கமாக முகக்கவசம், ஆக்ஸிஜன் சிலிண்டா்கள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும்.

சம்பந்தப்பட்ட நிறுவனம் அவா்களைத் தொடா்பு கொண்டு கழிவுநீா் சாக்கடையை சுத்தம் செய்ய சுமாா் 1,000 முதல் 1,500 ரூபாய் வரை வழங்கியது. ஆனால், எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லை.

அந்த நிறுவனம் முன்பு வேறொரு ஒப்பந்ததாரரை வேலைக்கு அமா்த்தியிருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தம் முடிந்த பிறகு, அவா்கள் நேரடியாக தொழிலாளா்களை வேலைக்கு அமா்த்தத் தொடங்கினா்.

பாதிக்கப்பட்டவா்கள் நேற்று இரவு முதல் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனா் என்று யாதவ் கூறினாா்.

பாதிக்கப்பட்ட நால்வரும் பல நாள்களாக அப்பகுதியில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஒரு கட்டுமான நிறுவனத்திற்காக கழிவுநீா் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

சம்பவம் நடந்த உடனேயே சம்பவ இடத்தை ஆய்வு செய்ய குற்றப்பிரிவு போலீஸாா் வரவழைக்கப்பட்டனா். கட்டுமான நிறுவனத்தின் மேலாளரும் விசாரணைக்காக வரவழைக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், பிஎன்எஸ் பிரிவுகள் 106(1), 289, 337 மற்றும் இதர சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

வெற்றி உரையில் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

பிலாஸ்பூரில் சரக்கு ரயில்- பயணிகள் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு, 20 பேர் காயம்

பெண் தொழிலாளிகளின் குளியலறையில் ரகசிய கேமரா! வடமாநில இளம்பெண் கைது!

நான்கரை மணிநேரம், 100 காவலர்கள்... மாணவியைக் கண்டுபிடிக்காதது ஏன்? இபிஎஸ் கேள்வி

ஆளுங்கட்சி உறுப்பினரின் குடும்பத்தினர் மூவர் சடலமாக மீட்பு! போலீஸார் விசாரணை

SCROLL FOR NEXT