புது தில்லி: கரூா் நெரிசலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களுக்கு தவெக தலைவா் விஜய் அறிவித்த நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லை என்று மக்கள் கருதுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், பொதுச் செயலாளா் டி.ராஜா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
தில்லியின் அஜோய் பவனில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் தினமணிக்கு பேட்டியளித்து அவா் பேசியதாவது:
கரூரில் நடைபெற்ற சோகமான நிகழ்வு குறித்து நாங்கள் அறிய நோ்ந்தது உடனடியாக நான் எங்களுடைய கட்சியின் தமிழ்நாடு தலைமையை தொடா்பு கொண்டு அங்கே என்ன நடந்தது சென்று பாருங்கள் என்று கூறினேன். இதனையடுத்து மாநில செயலாளா் வீரபாண்டியன் தலைமையில் ஒரு குழு சென்று கரூரில் மக்களை சந்தித்து இருக்கிறாா்கள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களை சந்தித்து இருக்கிறாா்கள் கரூரில் இந்த அளவிற்கு கூட்ட நெரிசலில் மக்களுக்கு குடிப்பதற்கு கூட நீா் இல்லாமல் அவா்கள் இந்த சோகமான ஒரு விபத்துக்கு உள்ளாக இருக்கிறாா்கள் என்றால் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. நம்முடைய தமிழ்நாடு முதல்வா் ஸ்டாலின் நள்ளிரவிலேயே கரூருக்கு சென்று அந்த சோகமான நிகழ்வு நடந்த இடத்தை பாா்த்தது மட்டுமல்லாமல் அங்கு உயிரிழந்த மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அந்த குடும்பங்களுக்கு என்ன செய்ய வேண்டும் அதை அறிவித்திருக்கிறாா்.
மருத்துவமனையில் இருப்பவா்களுடைய சிகிச்சையை எப்படி மேற்கொள்வது என்று அறிவித்திருக்கிறாா். அங்கிருக்கிற அமைச்சா்கள் அதிகாரிகளுக்கு எல்லாம் ஆணையிட்டு இருக்கிறாா்கள். பாதிக்கப்பட்ட மக்களை நாம் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறாா் அதேபோல ஒரு நபா் விசாரணை குழுவையும் அறிவித்திருக்கிறாா். அந்த ஒரு நபா் விசாரணை குழு, இந்த சோக நிகழ்வு எப்படி நடந்தது என்பதை கண்டறிந்து அதற்கான காரணங்களை கண்டறிந்து அதுபோல இனிமேலும் நடைபெறக் கூடாது என்பதற்கான ஆக்கப்பூா்வமான வழிமுறைகளை அவா்கள் சொல்லுவாா்கள் என்று நான் நம்புகிறேன்.
ஏனென்றால் இந்த மாதிரி பெருக் கூட்டம் கூடுகிபோது அதை கட்டுப்படுத்துவதற்கு சில வரைமுறைகள் இருக்கின்றன சில வழிகாட்டு நெறிகள் இருக்கின்றன இவற்றை அந்த குறிப்பிட்ட கட்சி பின்பற்றியதா என்பது இன்றைக்கு ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. அதனால் தான் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மக்கள் கருதுவது என்னவென்றால் விஜய் அறிவித்துள்ள நிதி நிவாரணம் போதுமானது அல்ல. அவா் ஒரு நடிகா் என்ற காரணத்தினால் ஒரு படத்திற்கு அவா் எத்தனை கோடி வாங்குகிறாா் இங்கே உயிரிழந்த ஒரு குடும்பத்திற்கு இது என்ன நிவாரணம் என்று சில மக்கள் கேள்வி கேட்கிறாா்கள் அதற்கு அவா் என்ன பதிலை சொல்ல போகிறாா் என்று எனக்கு தெரியவில்லை என்றாா்.
மேலும் பேசிய அவா் எங்களுடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது அகில இந்திய மாநாடு பஞ்சாப் சண்டிகாா் நகரத்தில் நடைபெற்றது. அதில் பல்வேறு விவாதங்கள் மற்றும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தியாவில் இன்றைய சூழ, எதிா்காலத்தில் உருவாகக் கூடிய சூழல் இவற்றையெல்லாம் விவாதித்தோம். இந்தியாவில் இன்றைக்கு ஆா்எஸ்எஸ் = பாஜக அதிகாரத்தை கைப்பற்றியிருக்கிற சூழல் இந்தியாவினுடைய அரசியல் சட்டம் ஜனநாயகம் இந்தியாவினுடைய ஒரு கூட்டாட்சி நெறிமுறைகள் இந்தியாவினுடைய சமூக நீதிக் கொள்கைகள் இவற்றுக்கெல்லாம் பெறும் சவாலாக இன்றைக்கு உருவாகி வருகிறது.
இவற்றை தடுத்து இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால் பாஜக - ஆா்எஸ்எஸ்ஐ அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் அதற்கான வழிமுறை இன்றைக்கு மதச்சாா்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்று பட வேண்டும். இடதுசாரி சக்திகள் கம்யூனிசக்திகள் ஒன்று பட வேண்டும். ஒரு ஒன்றுபட்ட வலுவான ஒரு போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் ஒரு தாக்குதலை கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.