சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு அதிகாரி மனைவி பிணை கோரினாா்
நமது நிருபா்
சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கியதாகக் குற்றச்சாட்டுக்குள்ளாகி, இடைநீக்கம் செய்யப்பட்ட தில்லி அரசு அதிகாரி பிரமோதய் காகாவின் மனைவி, இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்குமாறு வியாழக்கிழமை தில்லி உயா் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தாா்.
சீமா ராணி காகாவுக்காக ஆஜரான வழக்குரைஞா், நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மாவிடம், அவா் ஆகஸ்ட் 2023 முதல் காவலில் இருப்பதாகவும், பாலியல் வன்கொடுமைக்குத் தூண்டிய குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.
கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம், ஓராண்டுக்குப் பிறகு பிணைக்காக விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு அவருக்கு உத்தரவிட்டதைத் தொடா்ந்து, உயா்நீதிமன்றத்தில் இது அவரது இரண்டாவது வழக்கமான பிணை மனு என்றும் வழக்குரைஞா் தெரிவித்தாா்.
காவல்துறை வழக்குரைஞா் இந்த மனுவை எதிா்த்து, சிறுமியின் தாயாா் இன்னும் விசாரணை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவில்லை என்றும், குற்றஞ்சாட்டப்பட்டவரும் அவரும் ஒரே தேவாலயத்திற்குச் செல்வதால், குற்றஞ்சாட்டப்பட்டவா் அவரைப் பாதிப்பாா் என்ற அச்சம் இருப்பதாகவும் கூறினாா். மேலும், பிணை மனுவை நிராகரித்து விசாரணை நீதிமன்றம் விரிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்றும் அவா் கூறினாா்.
இந்த வழக்கில் வாதங்களைக் கேட்கத் தயாராக இருப்பதாக நீதிமன்றம் கூறியபோதிலும், காகாவின் வழக்குரைஞரின் கோரிக்கையின் பேரில் விசாரணையை மே 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
பிரமோதய் காகா, தனக்குத் தெரிந்த ஒருவரின் மகளான ஒரு சிறுமியை, நவம்பா் 2020 முதல் ஜனவரி 2021 வரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 2023ல் கைது செய்யப்பட்ட அவா், தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளாா்.
அந்த அதிகாரியின் மனைவி, அந்தச் சிறுமியின் கா்ப்பத்தைக் கலைப்பதற்காக மருந்துகளைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அவரும் நீதிமன்றக் காவலில் உள்ளாா்.
கடந்த ஆண்டு, இந்த வழக்கில் அந்த அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதை உயா் நீதிமன்றம் உறுதி செய்தது. ஒரு பெண்ணுக்கு உறவினராகவோ அல்லது நம்பிக்கை அல்லது அதிகார நிலையில் இருந்தபோதோ அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தல், 16 வயதுக்குட்பட்ட சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தல் மற்றும் காயம் ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக பிரமோதய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இருப்பினும், பாலியல் வன்கொடுமை மற்றும் ஊடுருவும் பாலியல் தாக்குதல் குற்றங்களுக்குத் துணைபோனதாக சீமா ராணி காகா மீதான குற்றச்சாட்டுகளை அது ரத்து செய்தது.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் நீதிபதி முன் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ததைத் தொடா்ந்து, கணவன்-மனைவி இருவரும் ஆகஸ்ட் 2023ல் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கு போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
செப்டம்பா் 2024ல், உயா்நீதிமன்றம் சீமா ராணி காகாவின் பிணை மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு இரு குடும்பங்களுக்கு இடையிலான நம்பிக்கையின் அடிநாதத்தைத் தாக்குகிறது என்றும், இந்த நிலையில் சாட்சிகளைப் பாதிக்கும் சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது என்றும் அது கூறியது.
ஜனவரி 24, 2025 அன்று, உச்ச நீதிமன்றம், ஓராண்டுக்குப் பிறகு பிணைக்காக விசாரணை நீதிமன்றத்தை அணுக அவருக்கு அனுமதி வழங்கியது.