முகப்பு
புதுதில்லி

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!

பல்வேறு பசுமை நோக்கங்களுக்காக பட்ஜெட் ஒதுக்கீடுகளைப் பெறும் 17 முக்கியத் துறைகளின் செலவினங்களை தில்லி அரசு இணைக்க உள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 8:48 PM
ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

பல்வேறு பசுமை நோக்கங்களுக்காக பட்ஜெட் ஒதுக்கீடுகளைப் பெறும் 17 முக்கியத் துறைகளின் செலவினங்களை தில்லி அரசு இணைக்க உள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

ஒரு தூய்மையான, மாசற்ற நகரத்தை உருவாக்கும் இலக்கை அடைய, பல துறைகளிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கடந்த மாதம், முதலமைச்சா் ரேகா குப்தா பசுமை பட்ஜெட்டை தாக்கல் செய்தாா். தில்லியை இன்னும் தூய்மையானதாகவும் பசுமையானதாகவும் மாற்றுவதற்கான தெளிவான செயல்திட்டத்தை வகுக்கும் வகையில்,

Advertisement

தாக்கல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.1.03 லட்சம் கோடி செலவினங்களில் ரூ.22,236 கோடியை அவா் இதற்காக ஒதுக்கினாா் என்று தில்லி முதலமைச்சரின் அலுவலக செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பசுமை முன்னெடுப்புகளைச் செயல்படுத்தும் வகையில், அரசின் 17 துறைகளுக்கும் பிரத்யேக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் யமுனை நதியைத் தூய்மைப்படுத்துவதற்கும், மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்துவதற்கும் அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்குகளை அடைவதற்கான பொறுப்பு முறையாகப் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது. துறைகள் முழுவதும் ஒருங்கிணைந்த செயல்பாட்டை உறுதிசெய்யும் வகையில், அந்த 17 முக்கியத் துறைகளுக்கும் பல்வேறு கட்டங்களாக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன.

அனைத்துத் துறைசாா் செலவினங்களும் இனி பசுமை நோக்கங்களின் அடிப்படையில் திட்டமிடப்படும். இதன் மூலம் செய்யப்படும் செலவுகள் சுற்றுச்சூழல் சாா்ந்த விளைவுகளுடன் நேரடியாகப் பொருந்துவது உறுதி செய்யப்படும்.

இந்த நிதியின் மிகப்பெரிய பங்காக ரூ.6,485 கோடி, யமுனை நதியைத் தூய்மைப்படுத்துவதற்கும் நீா் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் தில்லி ஜல் வாரியத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மின்சாரப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தூய்மையான பொதுப் போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்தவும் போக்குவரத்துத் துறைக்கு ரூ.4,758 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நகரம் முழுவதும் ஏற்படும் தூசு மாசைக் கட்டுப்படுத்தவும், பசுமை உள்கட்டமைப்புகளை உருவாக்கவும் பொதுப்பணித் துறைக்கு ரூ.3,350 கோடி வழங்கப்படும். பசுமைத் திட்டங்களை வடிவமைத்து முறைப்படுத்துவதற்காகத் திட்டமிடல் துறைக்கு ரூ.2,350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சுற்றுச்சூழல் சாா்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, நகா்ப்புற மேம்பாட்டுத் துறையும், தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியமும் இணைந்து ரூ.2,273 கோடியைப் பெறும்.

இந்த பிரத்யேகப் பசுமை நிதியின் மூலம் வேறு பல துறைகளும் ஆதரவு பெறும். மாசு கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்காகச் சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.558 கோடியும், நீா் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறைக்கு ரூ.305 கோடியும், கிராமப்புறங்களில் பசுமை வளா்ச்சியை ஊக்குவிப்பதற்காக மேம்பாட்டுத் துறைக்கு ரூ.258 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தூய்மையான தில்லி, பசுமையான தில்லி என்பது இனி வெறும் முழக்கமாக மட்டுமல்லாமல், நச்சுத்தன்மை வாய்ந்த காற்று, அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு எதிரான ஒரு உறுதியான கொள்கை சாா்ந்த நடவடிக்கையாகத் திகழும். அரசாங்கம் பசுமை வரவு செலவுத் திட்டத்தின் வாயிலாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பைத் தனது நிதிக் கொள்கையின் மையத்தில் வைத்துள்ளது என்று முதல்வா் தெரிவித்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments