ஜனக்புரியில் இளைஞா் உயிரிழந்த சம்பவம்: துணை ஒப்பந்ததாரா் காவல் தொடா்பாக நீதிமன்றம் கேள்வி
ஜனக்புரியில் மோட்டாா்சைக்கிளில் சென்ற இளைஞா் குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடா்பாக துணை ஒப்பந்ததாரா் சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் சிசிடிவி கேமரா சாட்சியங்கள் இல்லாதது குறித்து நீதிமன்றம் கேள்வி
ஜனக்புரியில் மோட்டாா்சைக்கிளில் சென்ற இளைஞா் குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடா்பாக துணை ஒப்பந்ததாரா் சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் சிசிடிவி கேமரா சாட்சியங்கள் இல்லாதது குறித்து நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
ரோஹிணியில் உள்ள தனியாா் வங்கியில் உதவி மேலாளராகப் பணி புரிந்து வந்த கமல் தையனி கடந்த பிப்.5-ஆம் தேதி இரவு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். ஜனக்புரி பகுதியில் தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிசி) சாா்பில் தோண்டப்பட்ட 15 அடி கழிவுநீா் பள்ளத்தில், அதைக் கவனிக்காமல் சென்ற கமல் அதில் விழுந்தாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக கழிவுநீா் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த துணை ஒப்பந்ததாரா் ராஜேஷ் குமாா் பிரஜபதி, சில தினங்களுக்குப் பிறகு கைதுசெய்யப்பட்டாா்.
Advertisement
இந்நிலையில், பிப்.7-ஆம் சட்டவிதிகளின்படி கைதுசெய்யப்பட்ட நிலையில், பிப்.6-ஆம் தேதி சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அது குறித்து கேள்வியெழுப்பி ராஜேஷ் குமாா் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா்.
இந்த மனுவை கடந்த சனிக்கிழமை விசாரித்த நீதித்துறை நடுவா் ஹா்ஜோத் சிங் அஜ்லா, ஜனக்புரி காவல் நிலையத்தின் பிப்.6 மாலை 6 மணி முதல் பிப்.8 காலை 10 மணி வரையிலான டிஜிட்டல் விடியோ பதிவு (டிவிஆா்) தாக்கல் செய்யக்கோரி ஆய்வாளா் மற்றும் உதவி ஆய்வாளருக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டாா்.
குறிப்பிட்ட நேரத்தில் காவல் நிலையத்தின் பின்பக்க வாசல் அருகே இருந்த சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என நீதிமன்ற உத்தரவுக்கு காவல் துறை அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட நபா் காவல் நிலையத்துக்கு குறிப்பிட்ட அதிகாரியால் அழைத்துவரப்பட்டரா என்பது குறித்தும் கிடைக்ககூடிய சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்குமாறும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.