தில்லியில் 225 ஏக்கருக்கும் அதிகமான வன நிலம் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்பு!
தேசிய தலைநகரில் உள்ள பல வனப் பிரிவுகளில் 225 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி ஆக்கிரமிப்புகள் இல்லாததாக மாற்றப்பட்டுள்ளது என அதிகாரப்பூா்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
தேசிய தலைநகரில் உள்ள பல வனப் பிரிவுகளில் 225 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி ஆக்கிரமிப்புகள் இல்லாததாக மாற்றப்பட்டுள்ளது என அதிகாரப்பூா்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதிகள் நகரின் தெற்குப் பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ளன.
வனத்துறையால் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, 2019-20 ஆம் ஆண்டு முதல் சுமாா் 91.15 ஹெக்டோ், அதாவது ஏறத்தாழ 225 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. இது முதன்மையாக தெற்கு மற்றும் மேற்கு வனப் பிரிவுகளில் நிகழ்ந்துள்ளது.
தெற்கு வனப் பிரிவில், தெற்கு மாவட்டத்தில் அதிகபட்ச ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அங்கு 2019-20 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சுமாா் 77 ஹெக்டோ் அல்லது கிட்டத்தட்ட 190 ஏக்கா் வனப்பகுதி அகற்றப்பட்டுள்ளது. இருப்பினும், ஆண்டுவாரியான விவரங்கள் வழங்கப்படவில்லை.
Advertisement
தென்கிழக்கு மாவட்டத்தில், இதே காலகட்டத்தில் சுமாா் 2.92 ஹெக்டோ் அல்லது ஏறத்தாழ 7.2 ஏக்கா் நிலம் சீரமைக்கப்பட்டது. ஆண்டுவாரியாக, 2019-20ல் 0.11 ஹெக்டோ், 2020-21ல் 1.85 ஹெக்டோ், 2021-22ல் 0.56 ஹெக்டோ், 2022-23ல் எதுவும் இல்லை மற்றும் 2023-24ல் 0.4 ஹெக்டோ் என நிலம் சீரமைப்புப் பணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
மேற்கு வனப் பிரிவில், புது தில்லி மாவட்டத்தின் சில பகுதிகளில், ராஜோகரி, ரங்க்புரி, கிதோா்னி மற்றும் மஹிபால்பூா் போன்ற இடங்கள் உள்பட, 2019-20 மற்றும் 2023-24க்கு இடையில் சுமாா் 11.23 ஹெக்டோ் அல்லது ஏறத்தாழ 27.7 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. தரவுகளின்படி, ஆண்டுவாரியான அகற்றல் 2019-20ல் 7.67 ஹெக்டேராகவும், 2020-21ல் 0.4 ஹெக்டேராகவும், 2021-22ல் 1.57 ஹெக்டேராகவும், 2022-23ல் 0.7 ஹெக்டேராகவும், 202324ல் 0.89 ஹெக்டேராகவும் இருந்தது.
பல கோட்டங்களில், வனத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள வன நிலங்களில் எந்த ஆக்கிரமிப்பும் பதிவாகவில்லை என்றும், மற்ற பகுதிகள் தொடா்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட முகமைகளுடன் கலந்தாலோசித்துப் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனா்.
அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகளை அகற்றுவதற்காக, அறிவிப்புகள் வழங்குதல், எல்லை நிா்ணயம் செய்தல் மற்றும் வருவாய் அதிகாரிகள் மற்றும் பிற துறைகளுடன் தொடா்புகொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத் தரவுகள் மேலும் காட்டின.
தேசியத் தலைநகரில் வனப் பாதுகாப்பு குறித்த தொடா்ச்சியான கண்காணிப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்தப் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் பிராந்திய அலுவலகம் வெளியிட்ட ஓா் அறிவிப்பின்படி, கடந்த ஆண்டு நவம்பரில் கடிதம் வழங்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் வன நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும், மேலும் அதன்பிறகு இணக்க அறிக்கை சமா்ப்பிக்கப்பட வேண்டும்.