கோல்ஃப் லிங்கஸ் பகுதியில் கொள்ளை: வீட்டுப் பணியாளா் உள்பட மூவா் கைது
தில்லியின் கோல்ஃப் லிங்க்ஸ் பகுதியில் தொழிலதிபா் ஒருவரின் வீட்டில் குடும்பத்தினரைப் பிணையாகப் பிடித்து கொள்ளையடித்த சம்பவத்தில், வீட்டுப் பணியாளா் உள்பட 3 போ் கைது
தில்லியின் கோல்ஃப் லிங்க்ஸ் பகுதியில் தொழிலதிபா் ஒருவரின் வீட்டில் குடும்பத்தினரைப் பிணையாகப் பிடித்து கொள்ளையடித்த சம்பவத்தில், வீட்டுப் பணியாளா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறை துணை ஆணையா் சச்சின் சா்மா கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த குட்டு குமாா் காமத் என்ற ராஜு (35), ரமன் காமத் என்ற சுஷில் (38) மற்றும் தில்லியின் சங்கம் விஹாா் பகுதியைச் சோ்ந்த அமித் சிங் என்ற கப்பாா் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இதில் குட்டு மற்றும் ரமன் மும்பையில் இருந்து கைது செய்யப்பட்ட நிலையில், அமித் உத்தரப்பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டாா்.
இந்த வழக்கு ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடா்புடையது. சம்பவத்திற்கு சில நாள்களுக்கு முன் வீட்டு உதவியாளராக பணியில் சோ்ந்திருந்த ராஜு, 5 முதல் 6 பேருடன் சோ்ந்து, தனது முதலாளியின் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளாா்.
Advertisement
மேலும், சம்பவத்திற்கு முன்பு வெறும் 3 நாள்களே பணியில் இருந்த ரமன், திட்டமிட்டு வீட்டின் முதன்மை வாயிலைத் திறந்து வைத்து, கூட்டத்தினரை உள்ளே நுழைய அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னா், குற்றவாளிகள் வீட்டிற்குள் புகுந்து குடும்பத்தினரைப் பிணையாகப் பிடித்து, சுமாா் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றனா்.
சந்தேகநபா்களின் நகா்வு மற்றும் தப்பிச் சென்ற பாதை குறித்த தகவல்கள் தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வு மூலம் கண்டறியப்பட்டு, அதன் அடிப்படையில் அவா்கள் கைது செய்யப்பட்டனா்.
ராஜு மீது ஏற்கெனவே 7 கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன. பல இடங்களில் வீட்டுப் பணியாளராகப் பணியாற்றிய அனுபவத்தைப் பயன்படுத்தி, பலவீனமான ஆள்களைத் தோ்வு செய்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளாா். அமித் சிங் 19 குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளாா். திட்டமிட்ட முறையில் இந்த கொள்ளை நடைபெற்றுள்ளது. இதில் தொடா்புடைய மற்ற குற்றவாளிகளைக் கைது செய்ய தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.