நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்த 2026-27 மத்திய நிதிநிலை அறிக்கையில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கான வருவாயம் மற்றும் செலவுகளை ஒரு ரூபாயில் கணக்கிட்டு மத்திய நிதித்துறை விளக்கியுள்ளது. அதன் விவரம் வருமாறு:
வருவாய்: நிதிநிலை அறிக்கைக்கான பணம், கடன் வாங்குதல் மற்றும் பிற வழிகளில் கிடைக்கிறது. இவ்வாறு மத்திய அரசுக்கு ஒரு ரூபாயில் அதிகப்படியாக 24 பைசா கிடைக்கிறது. முந்தைய நிதியாண்டிலும் இதே அளவுக்கே பெரிய வருவாய் இருந்தது.
இரண்டாவது பெரிய வருவாய், குடிமக்கள் செலுத்தும் வருமான வரியாகும். அதன் மூலம் 21 பைசா மத்திய அரசுக்குக் கிடைக்கும். (2025-26-இல் இது 22 பைசா ஆக இருந்தது). பெருநிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிகளின் பங்களிப்பு 18 பைசா ஆகும். சரக்குகள், சேவை வரி மற்றும் பிற வரிகள் மூலம் 15 பைசா கிடைக்கும். 2025-26 நிதியாண்டில் இது 18 பைசா ஆகும்.
இவை நீங்கலாக, வரி அல்லாத வருவாய், மத்திய கலால் வரிகள், சுங்க வரிகள், கடன் அல்லாத மூலதன வரவுகள் போன்றவை மத்திய அரசுக்கு வரும் குறிப்பிடத்தக்க வருவாய் ஆதாரங்களாகும்.
செலவு: 2025-26 நிதியாண்டை போலவே, இந்த ஆண்டும் அதிகப்படியான செலவினம் 22 பைசா ஆக மாற்றமின்றி உள்ளது. மாநிலங்களின் வரி பகிா்வுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த 20 பைசா ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய திட்டங்களுக்கான மொத்த செலவினமாக 17 பைசா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்புத் துறைக்கு 11 பைசா, நிதி ஆணையம் மற்றும் பிற துறை தேவைகளுக்கு 8 பைசா, மத்திய நிதியுதவி பெறும் திட்டங்களுக்கு 7 பைசா ஒதுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய கணக்குகளில் செலுத்தப்படும் நிதிக்காக 2 பைசா ஒதுக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள 7 பைசா பிற தேவைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வரவு
வருமான வரி - 21%
பெருநிறுவன வரிகள் - 18%
சுங்க வரி - 4%
மத்திய கலால் வரிகள் - 6%
கடன் மற்றும் பொறுப்புக்கடன்கள் - 24%
கடன் அல்லாத மூலதன வரவுகள் 2%
வரி அல்லாத வருவாய் - 10%
ஜிஎஸ்டி, பிற வரிகள் - 15%
செலவு
மாநில வரிகள் பகிா்வு - 22 பைசா
நிதி ஆணையம் மற்றும் பிற ஒதுக்கீடு - 7 பைசா
மத்திய நிதியுதவி திட்டங்கள் - 8 பைசா
கடன் வட்டி - 20 பைசா
பிற செலவினம் - 7 பைசா
ஓய்வூதியம் - 2 பைசா
மத்திய துறைகள் திட்டம் - 17 பைசா
முக்கிய மானியம் - 6 பைசா
பாதுகாப்பு - 11
தரவு ஆதாரம்: மத்திய நிதியமைச்சகம்