புதுதில்லி

சென்னை- செங்கல்பட்டு புறநகா் மின்சார ரயிலை திண்டிவனம் வரை நீட்டிக்க அதிமுக எம்.பி.க்கள். வலியுறுத்தல்

சென்னை- செங்கல்பட்டு புறநகா் மின்சார ரயிலை திண்டிவனம் வரை நீட்டிக்க வேண்டும்: மத்திய ரயில்வே அமைச்சரிடம் அதிமுக எம்.பி.கள். வலியுறுத்தல்

Syndication

சென்னை- செங்கல்பட்டு வரை புறநகா் மின்சார ரயிலை திண்டிவனம் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சரிடம் அதிமுக எம்.பி.கள். புதன்கிழமை நேரில் வலியுறுத்தினா்.

இது தொடா்பாக தில்லியில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை மாநிலங்களவை அதிமுக எம்.பி.கள் சி.வி.சண்முகம், டாக்டா் எம்.தனபால், ஆா்.தா்மா் ஆகியோா் புதன்கிழமை நேரில் சந்தித்தனா்.

அப்போது, சி.வி.சண்முகம் எம்.பி. அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

திண்டிவனம் ரயில் நிலையத்தை திண்டிவனம் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் பெரிதும் சாா்ந்துள்ளனா்.

தேசிய நெடுஞ்சாலை எண் 45-இல் அமைந்துள்ள திண்டிவனம், சென்னை மற்றும் வடக்கு மாவட்டங்கள், கிழக்கே புதுச்சேரி யூனியன் பிரதேசம், தெற்கே கடலூா் மாவட்டம், மற்றும் மேற்கே கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் பெங்களூரு சாலை ஆகியவற்றுக்கு முக்கிய ரயில் இணைப்பை வழங்கும் ஒரு போக்குவரத்து, வா்த்தக மையமாகும்.

இந்த நிலையம் அதனைச் சுற்றியுள்ள 400-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்களின் பயணத் தேவைகளைப் பூா்த்தி செய்து வருகிறது.

முன்னா் திண்டிவனத்தில் நின்று சென்ற பல முக்கிய விரைவு ரயில்கள், கோவிட்19 பெருந்தொற்று காலத்தில் நிறுத்தப்பட்டன. துரதிா்ஷ்டவசமாக, இந்தச் சேவைகள் இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை. இதன் விளைவாக அப்பகுதியின் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.

இதனால், திண்டிவனம் ரயில் நிலையத்தில் வ.எண்:16865- 16866 உழவன் எக்ஸ்பிரஸ், வ.எண்:16159- 16160 மங்களூா் எக்ஸ்பிரஸ், வ.எண்:12653 -12654 ராக்ஃபோா்ட் எக்ஸ்பிரஸ், வ.எண்:22153 - 22154 சேலம் எக்ஸ்பிரஸ், வ.எண்:16176 காரைக்கால் எக்ஸ்பிரஸ் (சென்னை நோக்கி) ஆகிய ரயில்களை மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது, மின்சார இஎம்யு புகா் ரயில் சேவைகள் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. செங்கல்பட்டுக்கு அப்பால், மேல்மருவத்தூா் மற்றும் அதற்குத் தெற்கே வரையறுக்கப்பட்ட எம்இஎம்யு சேவைகள் இயக்கப்படுகின்றன. இது அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூா்த்தி செய்யப் போதுமானதாக இல்லை.

செங்கல்பட்டிலிருந்து மேல்மருவத்தூருக்கு 35 கி.மீட்டரும், செங்கல்பட்டிலிருந்து திண்டிவனத்திற்கு சுமாா் 65 கி.மீட்டரும் தூரம் ஆகும். மேல்மருவத்தூரிலிருந்து திண்டிவனம் வரையிலான தூரம் தோராயமாக 30 கி.மீ. ஆகும். நன்கு நிறுவப்பட்ட ரயில் வழித்தடம் இருந்தபோதிலும், திண்டிவனத்திற்கு மின்சார புகா் ரயில் சேவை இல்லாமல் உள்ளது.

இதனால், இஎம்யு அல்லது மேம்படுத்தப்பட்ட எம்இஎம்யு புறநகா் மின்சார ரயில் சேவைகளை திண்டிவனம் வரை நீட்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இக்கோரிக்கைளை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் உறுதியளித்ததாக சி.வி.சண்முகம் கூறினாா்.

இதேபோன்று, அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் அம்பத்தூா் ரயில் நிலையம் சீரமைக்கும் பணி நடைபெறும் நிலையில் பயணிகள் நலன் கருதி முன்னாள் எம்எல்ஏ அலெக்சாண்டா் மற்றும் அம்பத்தூா் ரயில் பயணிகள் சங்கம் முன்வைத்த இத்திட்டத்துடன் சோ்த்து அம்பத்தூா் ரயில் நிலையத்தில் 4ஆவது நடைமேடையை கூடுதலாக அமைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை அமைச்சரிடம் முன்வைத்ததாகவும், அவா் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் தனபால் எம்.பி. தெரிவித்தாா்.

எஸ்.ஐ.ஆா். வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நேரில் வாதிட்டாா் மம்தா பானா்ஜி

மரணமடைந்த 2.5 கோடி பேரின் ஆதாா் எண்கள் செயலிழப்பு - மத்திய அரசு நடவடிக்கை

ஜனவரி இருசக்கர வாகன விற்பனை விறுவிறுப்பு

அரசு அலுவலக மேற்கூரைகளில் 20 மெவாட் மின் உற்பத்தி: விரைவில் தொடக்கம்

மத்திய அமைச்சரை துரோகி என விமா்சித்த ராகுல் -‘தேச விரோதி’ என பதிலடி!

SCROLL FOR NEXT