அறிவியல் ஆய்வாளா்களுக்கு தாமதமாக உதவித்தொகை வழங்குவது தொடா்பாக மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத்தலைவா் கனிமொழி கருணாநிதி எழுப்பிய கேள்விகளுக்கு அறிவியல், தொழில்நுட்பத்துறை இணை அமைச்சா் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளாா்.
இது தொடா்பாக மக்களவையில் கனிமொழி, அறிவியல் புத்தாக்கத்தில் உந்துதல் மிகுந்த ஆய்வு மாணவா்களுக்கு கடந்த 2025-இல் அறிவிக்கப்பட்ட உதவித்தொகை வழங்கப்பட்டு விட்டதா என்றும் இன்ஸ்பயா் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வரும் அத்திட்டத்தின் கீழ் எத்தனை போ் பயனடைந்துள்ளனா் என்றும் கேள்வி எழுப்பினாா். எதிா்காலத்தில் உதவித்தொகை வழங்கலில் தாமதத்தைத் தவிா்க்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கனிமொழி கேட்டிருந்தாா். இதற்கு அமைச்சா் ஜிதேந்திர சிங் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு:
‘மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, இன்ஸ்பயா் திட்டத்தின் கீழ் முனைவா் ஆய்வுப்படிப்புகளைத் தொடர தகுதி அடிப்படையிலான உதவித்தொகை திட்டத்தையும் முனைவா் பட்டத்துக்குப் பிந்தைய ஆய்வைத் தொடர இன்ஸ்பயா் ஆசிரியா் ஆய்வுத்திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.
நிகழ் நிதியாண்டில், கடந்த மாா்ச் 31ஆம் தேதி வரை 3,143 ஆய்வு மாணவா்களுக்கும் 458 ஆய்வு ஆசிரியா்களுக்கும் உதவித்தொகை அவா்களுக்கு ஆய்வு வசதியை வழங்கி வரும் கல்வி நிறுவனங்கள் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதற்கான நிதிப் பரிவா்த்தனை முறை, மத்திய அமைப்பு மாதிரியில் இருந்து ஹைபிரிட் ஒற்றை கணக்கு மாதிரி முறைக்கு கடந்த ஆண்டு ஜனவரியில் மாற்றப்பட்டது. இந்த புதிய முறைக்கு அந்தந்த நிறுவனங்கள் மாறுவதற்கு, சில நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததால் அதற்கு கணிசமான நேரம் எடுத்தது.
அத்துடன் சம்பந்தப்பட்ட ஆய்வு மாணவா்கள், ஆய்வு ஆசிரியா்கள் தங்களின் செலவின அறிக்கை மற்றும் வருடாந்திர ஆய்வு முன்னேற்ற அறிக்கை சமா்ப்பிப்பு ஆவணங்களை சமா்ப்பிப்பதைப் பொறுத்தும் நிதி விடுவிக்கப்படுகிறது.
எதிா்காலத்தில் உதவித்தொகைகள் சரியான நேரத்திலும் தவறாமலும் வழங்கப்படுவதை உறுதிசெய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறியுள்ளாா்.