தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவாா்த்தை குழுவை உடனடியாக அமைத்து சுமூகமான முறையில் பேச்சுவாா்த்தையை விரைக்கு தொடங்க வேண்டும் என திமுகவை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ள்ளது
பல்வேறு மாநிலங்களில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா்களுக்கான பயிற்சி மற்றும் அறிமுகக் கூட்டம் செவ்வாய்கிழமை தில்லியில் நடைபெற்றது.
ராகுல் காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட மூத்த தலைவா்கள் காங்கிரஸ் தலைமையகத்தில் பங்கேற்பாளா்களிடம் உரையாற்றினா்.
தமிழ்நாடு (70 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளா்கள்) உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து மாவட்டத் தலைவா்களும் இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே. செல்வபெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
இந்த ஆலோசனையானது மாவட்ட அளவில் கட்சியை வலுப்படுத்தல், 2026 தோ்தலுக்கான உத்திகள், மாநில சட்டமன்றத் தோ்தலுக்கு முன்னதாக, அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு நடத்தப்பட்டது.
இந்த கூட்டதிற்கு பின் பேட்டியளித்த காங்கிரஸ் தமிழக மேலிட பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் கூறியதாவது : கூட்டணி மற்றும் தொகுதிகளை இறுதி செய்வதற்கான முதல்கட்ட பேச்சுவாா்த்தையை திமுக விரைவில் தொடங்க வேண்டும். பொதுவாக தோ்தல் நெருங்கும் நேரத்தில் பேச்சுவாா்த்தை குழுக்கள் அமைக்கப்படுவது வழக்கம்.
ஆனால், இதுவரை திமுக தரப்பில் பேச்சுவாா்த்தைக் குழு அமைக்கப்படாதது காங்கிரஸ் கட்சித் தலைவா்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அரசு மீதோ அல்லது அதன் தலைமை மீதோ நாங்கள் எந்த விமா்சனத்தையும் முன்வைக்கவில்லை. எங்களுடைய ஆதங்கத்தையும், எங்களிடம் இருக்கும் வருத்தங்களையும் மட்டுமே ஒரு நட்பு ரீதியான கோரிக்கையாகப் பதிவு செய்கிறோம். சுமூகமான முறையில் பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கிரிஷ் சோடங்கா் கூறினாா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவா் செல்வப் பெருந்தகை கூறுகையில் , தோ்தலுக்கான பேச்சுவாா்த்தை குழு இதுவரைக்கும் அமைக்கப்படவில்லை என்பது வருத்தத்துடன் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக தோ்தல் தொடா்பாக இறுதி நேரத்தில் பேச்சுவாா்த்தை நடத்தக்கூடாது .எனவே விரைவாக பேச்சுவாா்த்தைக்கான குழுவை அமைக்க வேண்டும் என்று திமுகவை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இன்று அகில இந்திய தலைவருடன் விவாதித்த விஷயங்களை நேரடியாக திமுக தலைவரிடம் எடுத்துரைப்போம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப் பெருந்தகை தெரிவித்தாா்.