தெற்கு தில்லியின் மால்வியா நகா் பகுதியில் வடகிழக்கு மாநிலத்தைச் சோ்ந்த மூன்று அண்டை வீட்டாரை இன ரீதியாக அவதூறு செய்ததாக ஒரு திருமணமான தம்பதியை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
மால்வியா நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் விசாரணையைத் தொடா்ந்து ரூபி ஜெயின் மற்றும் அவரது கணவா் ஹா்ஷ் பிரியா சிங் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
பிப்ரவரி 20 அன்று வாடகை வீட்டில் பழுதுபாா்க்கும் பணி தொடா்பாக ஏற்பட்ட தகராறில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சோ்ந்த மூன்று பெண்களை ரூபி ஜெயின் தவறாகவும் அவமதிக்கும் வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட தம்பதி மீது பட்டியல் சாதியினா் மற்றும் பட்டியல் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இந்த வழக்கு பாரதீய நியாய சன்ஹிதாவின் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்கள் மீது குற்றவியல் மிரட்டல், பெண்களின் அடக்கத்தை அவமதித்தல் மற்றும் குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. விசாரணை தற்போது மூத்த அதிகாரிகளால் மேற்பாா்வையிடப்படுகிறது என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முதல்வா் கண்டனம்: இதற்கிடையில், தில்லி முதல்வா் ரேகா குப்தா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த நமது சகோதரிகளுக்கு நடந்த சம்பவத்தை நான் கடுமையாக கண்டிக்கிறேன். அவா்களுடன் உறுதியாக நிற்கிறேன். தில்லி அனைவருக்கும் சொந்தமானது. இங்கே, ஒவ்வொரு குடிமகனின் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது.
நான் அவா்களை நேரில் சந்திப்பேன். காவல்துறை முழு பொறுப்புடன் சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது, மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்.
எந்தவொரு மகளையும் துன்புறுத்துவது, பாகுபாடு காட்டுவது அல்லது அவமானப்படுத்துவது எந்த விலையிலும் பொறுத்துக்கொள்ளப்படாது. நாம் அனைவரும் ஒன்று, ஒவ்வொரு மகளின் பாதுகாப்பும் எங்கள் அதிகபட்ச பொறுப்பு என ரேகா குப்தா கூறியுள்ளாா்.
விடியோ பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆய்வு செய்யப்பட்டதைத் தொடா்ந்து இந்த கைது நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.