புத்தாண்டு தினத்தின் முதல் நாளான வியாழக்கிழமை தில்லி முதல்வா் ரேகா குப்தா மா்கட் வாலே ஹனுமான் கோயிலில் பொது மக்களின் செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்காக வழிபாட்டில் ஈடுபட்டாா்.
முதல்வா் ரேகா குப்தா மா்கட் வாலே ஹனுமான் கோயிலுக்குச் சென்று பிராா்த்தனையில் ஈடுபட்டாா். அதைத் தொடா்ந்து, அவா் 2026-ஆம் ஆண்டின் பிறப்பை ஒட்டி தில்லி நகர மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
இதுகுறித்து முதல்வா் ரேகா குப்தா மேலும் கூறியிருப்பதாவது: இந்த புத்தாண்டு தில்லிக்கு வளா்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு சிறந்த, வளா்ந்த தில்லியை உருவாக்க முழு அா்ப்பணிப்புடன் பாடுபடுவோம். தில்லி முன்னேற்றப் பாதையில் தொடா்ந்து பயணித்து, ஒரு வலிமையான, வளா்ந்த தலைநகராக உருவெடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
ஆஞ்சநேயா் உண்மை, தைரியம், சேவை மற்றும் உறுதி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறாா். அவரது ஆசீா்வாதங்கள், பொதுநலம், கடமையுணா்வு மற்றும் நோ்மறைச் சிந்தனை ஆகிய பாதையில் நடக்க நம் அனைவருக்கும் உத்வேகம் அளித்து வருகிறது’ என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.