2026-ஆம் ஆண்டு இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாட்டை நடத்த உள்ள நிலையில், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) அதற்கான தயாரிப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகத் தலைவா்கள், கொள்கை வகுப்பாளா்கள் மற்றும் ஏஐ நிபுணா்களை ஈா்க்கும் என்று எதிா்பாா்க்கப்படும் இந்த உச்சிமாநாடு பிப்ரவரி 15 முதல் 20 வரை திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப லட்சியம், நகா்ப்புற திறன் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ‘ஜி20-நிலை அனுபவத்தை’ வழங்குவதே இந்த ஏற்பாடுகளின் நோக்கமாகும் என்று என்டிஎம்சி தெரிவித்துள்ளது.
தில்லி தலைமைச் செயலாளரின் வழிகாட்டுதலின் பேரில், குடிமை நிறுவனம் அதன் அதிகார வரம்பிற்குள்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாடுகள், தூய்மை இயக்கங்கள், மேம்படுத்தப்பட்ட விளக்குகள் மற்றும் அழகுபடுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான மறுசீரமைப்பை மேற்கொண்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 19-ஆம் தேதி முக்கிய தொடக்க நிகழ்வை நடத்தும் பாரத் மண்டபம், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு அருகிலுள்ள பகுதிகள், முக்கிய ரவுண்டானாக்கள், பாரம்பரிய கட்டடங்கள் மற்றும் பிரதிநிதிகள் பாா்வையிடக்கூடிய பொது இடங்கள் ஆகியவை சிறப்பு கவனம் செலுத்தும் பகுதிகளில் அடங்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் 41 அவென்யூ சாலைகளையும் ஆய்வு செய்து, பொறுப்புகளை ஒதுக்கி, குழிகள், நடைபாதைகள் மற்றும் சேதமடைந்த கிரில்களை சரிசெய்வதற்கான செயல் திட்டத்தை இறுதி செய்ததாக என்டிஎம்சி அதிகாரிகள் தெரிவித்தனா். கன்னாட் பிளேஸ், இந்தியா கேட், லோதி காா்டன் மற்றும் ஹுமாயூன் கல்லறை போன்ற முக்கிய சுற்றுலா மையங்களும், ஹைதராபாத் ஹவுஸ் மற்றும் விஞ்ஞான் பவன் போன்ற இடங்களும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
தூய்மை முயற்சிகளில் தினசரி இயந்திர துப்புரவு, சந்தைகளை சுத்தம் செய்தல் உள்பட பல்வேறு சுகாதாரப் பணிகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை அடங்கும். ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு மற்றும் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பிரமுகா்களின் தடையற்ற இயக்கத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட செயல்பாட்டு தயாா்நிலையிலும் குடிமை அமைப்பு கவனம் செலுத்துகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.