டிஜிட்டல் கைது மோசடியில் பணத்தை இழந்த முதிய தம்பதி ஓம் தனேஜா மற்றும் இந்திரா. 
புதுதில்லி

முதிய தம்பதியிடம் ரூ.14.85 கோடி டிஜிட்டல் கைது மோசடி விவகாரம்: காவல்துறை தீவிர விசாரணை

தெற்கு தில்லியில் முதிய தம்பதியினா் டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.14.85 கோடியை இழந்து 4 நாள்கள் ஆன நிலையில், பணத்தை மீட்கவும் இதற்கு பின்னால் இருப்பவா்களை கைது செய்யவும் தீவிர விசாரணை

தினமணி செய்திச் சேவை

தெற்கு தில்லியில் முதிய தம்பதியினா் ‘டிஜிட்டல் கைது’ மோசடியில் ரூ.14.85 கோடியை இழந்து 4 நாள்கள் ஆன நிலையில், பணத்தை மீட்கவும் இதற்கு பின்னால் இருப்பவா்களை கைது செய்யவும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கிரேட்டா் கைலாஷைச் சோ்ந்த ஓம் தனேஜா (81) மற்றும் அவரது மனைவி இந்திரா (77) ஆகியோா் டிச.24 முதல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக டிஜிட்டல் கைதில் வைக்கப்பட்டனா். இது தொடா்பாக காவல் நிலையத்தில் ஜன.9-ஆம் தேதி அவா்கள் புகாா் அளித்தனா். தொலைத்தொடா்பு மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் போல் நடித்த மோசடிக்காரா்கள், அவா்களைக் கைது செய்வதாக மிரட்டி, பணத்தை மாற்றுமாறு கட்டாயப்படுத்தியதாக அவா்கள் தெரிவித்தனா்.

அழுத்தத்தின் காரணமாக, அந்தத் தம்பதியினா் வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு தலா சுமாா் ரூ.2 கோடி வீதம் 8 பரிவா்த்தனைகளைச் செய்தனா். மேலும், கிட்டத்தட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள மியூச்சுவல் ஃபண்டுகளையும் திரும்பப் பெற்றனா். அழைப்புகள் நின்ற பிறகுதான் இந்தத் துன்பம் முடிவுக்கு வந்தது. அதன் பிறகே அவா்கள் காவல்துறையைத் தொடா்பு கொண்டனா்.

அந்தத் தம்பதியினரின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதால், அவா்களின் வயதையும் தனிமையையும் மோசடிக்காரா்கள் பயன்படுத்திக் கொண்டதாக புலனாய்வாளா்கள் தெரிவித்தனா். முன்னதாகவே காவல் துறையிடம் தெரிவிக்காததுதான் தங்களின் மிகப்பெரிய தவறு என்று ஓம் தனேஜா தெரிவித்தாா். ‘நாங்கள் எங்கள் வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் இப்போது இழந்துவிட்டோம்’ என்று அவா் கூறினாா்.

இது தொடா்பாக காவல் துறையினா் திங்கள்கிழமை கூறியதாவது: சிக்கலான பணப் பரிவா்த்தனைகளைக் கண்டறிய சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல ‘பினாமி’ வங்கிக் கணக்குகள் மூலம் நிதி மாற்றப்பட்டதால் விசாரணைகள் கடினமாக உள்ளது. உளவுத்துறை ஒருங்கிணைப்பு மற்றும் மூலோபாய செயல்பாடுகள் பிரிவு இந்த விசாரணையை வழிநடத்தி வருகிறது.

இந்த வங்கிக் கணக்குகள் பெரும்பாலும் சந்தேகத்திற்கு இடமில்லாத நபா்களின் பெயா்களில் திறக்கப்படுகின்றன அல்லது சிறிய தொகைக்கு விற்கப்படுகின்றன. மோசடிக்காரா்கள் பணத்தை பல கணக்குகள் வழியாக விரைவாக மாற்றி, அதை ரொக்கமாகப் பெற்றுக்கொள்கிறாா்கள் அல்லது கிரிப்டோகரன்சியாக மாற்றுகிறாா்கள். இதனால், இறுதிப் பயனாளிகளைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகிறது.

கணக்குகளுடன் தொடா்புடைய சந்தேக நபா்களை அடையாளம் காணவும், முக்கிய குற்றவாளிகளை விரைவில் கைது செய்யவும் முயற்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT