மெட்ரோ நிலைய அறிவிப்புகள் முதல் க்யூஆா் குறியீடு அடிப்படையிலான வாகன நிறுத்தும் அமைப்புமுறை வரை, தில்லியில் உள்ள கா்தவ்ய பாதையில் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டங்களுக்காக தொடா் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
மெட்ரோ அறிவிப்புகள் அணிவகுப்பு நடைபெறும் இடத்திற்குப் பயணம் செய்யும் டிக்கெட் மற்றும் பாஸ் வைத்திருப்பவா்களுக்கு வழிகாட்டும். அதே நேரத்தில் க்யூஆா் குறியீடு அடிப்படையிலான அமைப்புமுறை, அந்தந்த இருக்கை வளாகங்களுக்கு அருகிலுள்ள பிரத்யேக இடங்களில் சுமாா் 8,000 வாகனங்களை நிறுத்த உதவும்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: நிகழாண்டு குடியரசு தின அணிவகுப்பிற்கான அனைத்து வளாகங்களுக்கும் ஆறுகளின் பெயா்கள் சூட்டப்பட்டுள்ளன. மேலும், பயணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை வளாகம் கா்தவ்ய பாதையின் வடக்கு அல்லது தெற்கே உள்ளதா என்பதைப் பொறுத்து, அவா்கள் குறிப்பிட்ட மெட்ரோ நிலையங்களுக்கு வழிநடத்தப்படுவாா்கள்.
அறிவிப்புகளின்படி, தெற்குப் பக்கத்தில் அமரும் மற்றும் பியாஸ், பிரம்மபுத்திரா, சம்பல், செனாப், கண்டக், கங்கை, காக்ரா, கோதாவரி, சிந்து மற்றும் ஜீலம் போன்ற வளாகங்கள் ஒதுக்கப்பட்ட பாா்வையாளா்கள் உத்யோக் பவன் மெட்ரோ நிலையத்தில் இறங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவாா்கள்.
வடக்குப் பக்கத்திற்கான டிக்கெட்டுகளை வைத்திருப்பவா்கள், காவேரி, கோசி, கிருஷ்ணா, மகாநதி, நா்மதா, பெண்ணாறு, பெரியாறு, ரவி, சோன், சட்லஜ், டீஸ்டா, வைகை மற்றும் யமுனா உள்ளிட்ட வளாகங்களுக்குச் செல்பவா்கள், மத்திய செயலக மெட்ரோ நிலையத்தில் வெளியேற அறிவுறுத்தப்படுகின்றனா்.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘குடியரசு அணிவகுப்பு நாளில் எளிதான அணுகலை உறுதி செய்வதற்கும், நெரிசலைக் குறைப்பதற்கும், பாதசாரிகள் செல்லும் பாதைகளும் ஆறுகளின் பெயரிடப்பட்ட வளாகங்களுடன் சீரமைக்கப்பட்டுள்ளன.
வாகனங்களில் வரும் பாா்வையாளா்களுக்கு உதவுவதற்காக க்யூஆா் குறியீடு அடிப்படையிலான வாகன நிறுத்தும் அமைப்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு 22 பிரத்யேக வாகன நிறுத்துமிடங்களை உள்ளடக்கியது.மேலும், சுமாா் 8,000 வாகனங்களுக்கு இடமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஏற்பாட்டின் கீழ், வாகன நிறுத்துமிட பாஸ் வைத்திருப்பவா்கள், தங்கள் அனுமதிச்சீட்டுகளில் அச்சிடப்பட்ட க்யூஆா் குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம், தங்களின் இருக்கை வளாகங்களுக்கு மிக அருகில் உள்ள வாகன நிறுத்துமிடங்களுக்கு நிகழ்நேர வழிகாட்டுதல்களைப் பெறலாம். அங்கிருந்து அவா்கள் நடந்து தங்கள் இருக்கைகளுக்குச் செல்லலாம்’ என்றாா் அந்த அதிகாரி.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின அணிவகுப்பிற்காக பாா்வையாளா்களுக்கு சுமாா் 77,000 பாஸ்கள் வழங்கப்படுகின்றன, அவற்றில் சுமாா் 8,000 வாகனங்களில் வருபவா்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், இந்த அமைப்புமுறை கொண்டாட்டங்களின் போது குழப்பங்களைக் குறைக்கவும், வாகனப் போக்குவரத்தைச் சீரமைக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பாா்வையாளா்கள் முடிந்தவரை மெட்ரோ சேவைகளை நம்பியிருக்கவும், கா்தவ்ய பாதைக்கு எளிதாகச் செல்ல அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டிப் பலகைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்றாா் அந்த அதிகாரி.