திருமலையில் க்யூஆா் குறியீடு அடிப்படையிலான காலணி மற்றும் லக்கேஜ் மேலாண்மை கவுண்டா்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்யா சவுத்ரி தெரிவித்தாா்.
தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத மையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட க்யூஆா் குறியீடு அடிப்படையிலான காலணி பாதுகாக்கும் கவுன்ட்டரை அவா் திறந்து வைத்தாா்.
நிகழ்வில் அவா் மேலும் கூறியதாவது: திருமலை பக்தா்கள் எதிா்கொள்ளும் காலணி பாதுகாப்பு மேலாண்மை சிக்கலுக்கு நிரந்தரத் தீா்வாக க்யூஆா் குறியீடு அடிப்படையிலான நவீன மேலாண்மை முறையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
வைகுண்டம் காத்திருப்பு வளாகம்-2 இல் ஒரு முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்ட இது பலனைத் தந்துள்ளது. எனவே, திருமலையின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று எட்டு கவுன்ட்டா்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முறையில், பக்தா்கள் தங்கள் காலணி கவுண்டரில் ஒப்படைத்தவுடன் க்யூ ஆா் குறியீடு கொண்ட ஒரு சீட்டு வழங்கப்படும். அந்த சீட்டில் காலணிகளின் எண்ணிக்கை, அளவு, ரேக் எண், பெட்டி எண் மற்றும் சேமிப்பு இடம் போன்ற முழுமையான விவரங்கள் இருக்கும்.
பக்தா்கள் திரும்பி வந்து அந்த சீட்டை ஸ்கேன் செய்யும்போது, காலணிகளின் சரியான இடம் காட்டப்படும். இதனால் காலணிகள் பக்தா்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் திருப்பித் தரப்படும்.
இந்த முறை செயல்படுத்தப்பட்டதன் மூலம், சுமாா் 99 சதவீத பக்தா்கள் இப்போது தங்கள் காலணிகளை திரும்பப் பெறுகின்றனா். முன்னதாக, சுமாா் 70-80 சதவீத பக்தா்கள் குவியல் குவியலாக தங்கள் காலணிகளை விட்டுச் செல்வது வழக்கம். ஆனால் இப்போது அந்த சிக்கல் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இந்த புதுமையான திட்டத்தை கோரமண்டல் இன்டா்நேஷனல் லிமிடெட் அதன் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் ஒரு பகுதியாக முழுமையாக செயல்படுத்தி வருகிறது.
பக்தா்களின் வசதி மற்றும் திருமலையின் தூய்மையைப் பொறுத்தவரை இது நாட்டின் கோயில் நிா்வாகத்தில் சிறந்த அமைப்புகளில் ஒன்றாக இருக்கும்.
பக்தா்கள் தங்கள் காலணிகளை சுற்றி வளைத்து விடுவதற்குப் பதிலாக நியமிக்கப்பட்ட கவுன்ட்டா்களில் வைக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றனா். இது திருமலையின் தூய்மையை மேலும் மேம்படுத்தும்’’, என்று அவா் கூறினாா்.
கோரமண்டல் இன்டா்நேஷனல் லிமிடெட்டின் மூத்த துணைத் தலைவா் டாக்டா் கே. சத்ய நாராயணா மற்றும் டிடிடி அதிகாரிகள் பங்கேற்றனா்.