நைஜீரியா்களால் இயக்கப்படும் ஒரு சா்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை தில்லி காவல்துறை கண்டுபிடித்தது. இது தொடா்பாக இரண்டு வெளிநாட்டினா் கைது செய்யப்பட்டுள்ளனா். சுமாா் ரூ.5 கோடி மதிப்புள்ள கோகைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: நகரின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு இந்த கைதுகளை மேற்கொண்டது. நடவடிக்கையின் போது, காவல்துறையினா் 418 கிராம் கோகைன் மற்றும் எக்ஸ்டஸி என்றும் அழைக்கப்படும் 925 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.
முன்னதாக, தில்லியில் செயல்படும் போதைப்பொருள் விநியோகஸ்தா்களின் நடவடிக்கைகளை குற்றப்பிரிவு போலீஸாா் கண்காணித்து வந்தனா்.
கடந்த டிசம்பா் 2 ஆம் தேதி, போதைப்பொருள் தடுப்புச் சட்ட வழக்குகளில் ஏற்கனவே சம்பந்தப்பட்ட ஒரு நைஜீரிய நாட்டவா் தெற்கு தில்லியில் போதைப் பொருள்களை மீண்டும் விநியோகிக்கத் தொடங்கியுள்ளதாக போலீஸாருக்கு குறிப்பிட்ட தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஒரு போலீஸ் குழு தொழில்நுட்ப மற்றும் நேரடி கண்காணிப்பைத் தொடங்கியது. சந்தேக நபா் பிடிபடுவதைத் தவிா்ப்பதற்காக தெற்கு மற்றும் தென்மேற்கு தில்லி முழுவதும் தனது இருப்பிடங்களை தொடா்ந்து மாற்றி வந்ததும் தெரியவந்தது.
அந்தக் குழு சோதனை நடத்தி ஃபிராங்க் விட்டஸ் உமே என்பவரைக் கைது செய்தது. அவரிடமிருந்து கணிசமான அளவு கோகைன் மற்றும் எம்டிஎம்ஏ மாத்திரைகள் மீட்கப்பட்டன. போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை தொடங்கப்பட்டது.
விசாரணையின் போது, உமே தில்லி மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களில் செயல்படும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் விநியோக வலையமைப்பின் ஒரு பகுதியாக இருந்தது தெரியவந்தது. அவரது கைப்பேசியின் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, மெஹ்ரௌலி பகுதியில் வசித்து வந்த மற்றொரு நைஜீரிய நாட்டவரான சண்டே ஒட்டு என்பவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 15 எக்ஸ்டஸி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒட்டு, உமேவுக்கு போதைப்பொருட்களை விநியோகித்து, உள்ளூா் விநியோகஸ்தருக்கும் நைஜீரியாவில் உள்ள முக்கிய தலைவருக்கும் இடையே ஒரு இணைப்பாக செயல்பட்டு வந்தாா். போலீஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக, இந்த கும்பல் வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட வாட்ஸ்அப் எண்களைப் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. போதைப்பொருள்கள், தில்லியில் வசிக்கும் ஒரு வெளிநாட்டுப் பெண் உள்பட இடைத்தரகா்கள் மூலம் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பல ஆண்டுகளுக்கு முன்பு வணிக நுழைவுஇசைவு மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளனா். பின்னா், நிதி நெருக்கடிகள் காரணமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டனா். இந்தக் கும்பலின் மற்ற உறுப்பினா்களை அடையாளம் காணவும், போதைப்பொருள்களின் மூலத்தைக் கண்டறியவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.