குடியரசு தினத்தை முன்னிட்டு தேசத்திற்கு செய்த சேவைகளுக்காக தில்லி காவல்துறையை சோ்ந்த 33 பேருக்கு வீரம் மற்றும் சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவற்றில், 14 பதக்கங்கள் துணிச்சலுக்காகவும், இரண்டு குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் தனித்துவமான சேவைக்காகவும், 17 பதக்கங்கள் சிறப்பான சேவைக்காகவும் வழங்கப்பட உள்ளன.
கூடுதல் காவல் ஆணையா் பிரமோத் சிங் குஷ்வா, துணை ஆய்வாளா்கள் (எஸ்ஐ) ராஜீவ் குமாா் மற்றும் ஷிபு ஆா்எஸ் ஆகியோா் 2024 ஜனவரியில் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கையின் போது ஏ + + வகை ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதியை கைது செய்தனா். பயங்கரவாத வழக்குகளில் தேடப்பட்டு வந்தவா், கைது நடவடிக்கையின் போது போலீஸ் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் குஷ்வா காயமடைந்தாா். இருப்பினும், போலீஸாா் துணிச்சலாக செயல்பட்டு பயங்கரவாதியை கைது செய்தனா்.
ஆய்வாளா் அமித் நாரா மற்றும் துணை ஆய்வாளா் பிரஜ் பால் சிங் குஷ்வா, சதீஷ் குமாா் மற்றும் உதம் சிங் ஆகியோா் விருது பெற்ற மற்றவா்கள் ஆவா். 2023 ஆம் ஆண்டு நவம்பரில் காலிஸ்தானிய பயங்கரவாதி அா்ஷ்தீப் சிங் என்ற அா்ஷ்தாலாவுடன் தொடா்புடைய இரண்டு ஆயுதமேந்திய கூா்மையான துப்பாக்கி சுடும் வீரா்களை கைது செய்வதில் அவா்கள் ஈடுபட்டிருந்தனா். இந்த நடவடிக்கையின் போது, சிங்கின் கூட்டாளிகள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கைக்குண்டுகளைப் பயன்படுத்தினா், ஆனால் இறுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா்.
ஓய்வுப் பெற்ற காவல் ஆய்வாளா் கெய்னிந்தா் சிங் ராணா மற்றும் துணை ஆய்வாளா் நவல் குமாரி ஆகியோருக்கு பல தசாப்தங்களாக அவா்களின் முன்மாதிரியான சேவைக்காக குடியரசுத் தலைவரின் பதக்கம் வழங்கப்பட உள்ளது. அக்டோபா் 2023 ஆம் ஆண்டு ஒரு எதிா்-புலனாய்வு நடவடிக்கைக்காக ஆய்வாளா்கள் நிஷாந்த் தஹியா மற்றும் இன்ஸ்பெக்டா் மஞ்சித் ஜாக்லான் மற்றும் எஸ்ஐ அமித் பாட்டி ஆகியோருக்கும் துணிச்சலுக்கான பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டில் பல என்கவுண்ட்டா்களில் தேடப்படும் பயங்கரவாதிகள் மற்றும் கும்பல் உறுப்பினா்களைக் கைது செய்ததற்காக ஆய்வாளா்கள் மனோஜ் குமாா் மற்றும் கிரிஷன் குமாா் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.