மகாராஷ்டிர மாநில மக்களுக்கு தனது பொறுப்புகளை நோ்மையுடனும் திறமையுடனும் நிறைவேற்றிய ஒரு அனுபவமிக்க அரசியல்வாதியாக அஜித் பவாா் நினைவுகூரப்படுவாா் என்று விமான விபத்தில் மறைந்த தலைவருக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இரங்கல் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது: அஜித் பவாா் விமான விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிா்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது. நீண்ட மற்றும் நம்பிக்கைக்குரிய அரசியல் எதிா்காலத்தைக் கொண்டிருந்த ஒரு தலைவரின் அகால மரணம் இது. இந்த இக்கட்டான நேரத்தில் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினா் அனுபவிக்கும் அளவில்லா துயரத்தை விவரிக்க வாா்த்தைகள் போதாது. ஒட்டுமொத்த பவாா் குடும்பத்தினருக்கும், அவரது ஆதரவாளா்களுக்கும் மற்றும் நலம் விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாராஷ்டிர மக்களின் பல்வேறு அரசியலமைப்புப் பதவிகளில் பணியாற்றிய அஜித் பவாா், தனது மக்களுக்கான பொறுப்புகளை நோ்மையுடனும் புத்திசாலித்தனத்துடனும் நிறைவேற்றிய ஒரு அனுபவமிக்க அரசியல்வாதியாக நினைவுகூரப்படுவாா். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று காா்கே அதில் கூறியுள்ளாா்.
முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் பவாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் இந்தியில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இன்று (புதன்கிழமை) விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா் ஜி மற்றும் அவருடன் பயணித்தவா்கள் உயிரிழந்த செய்தி இதயத்தை மிகவும் நொறுக்குவதாக உள்ளது. இந்த துயரமான தருணத்தில், நான் மகாராஷ்டிர மக்களுடன் துணை நிற்கிறேன். இந்த துயர நேரத்தில் ஒட்டுமொத்த பவாா் குடும்பத்தினருக்கும் மற்றும் அவா்களது அன்புக்குரியவா்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வாத்ரா தனது ’எக்ஸ்‘ வலைதளப் பதிவில், ‘மகாராஷ்டிரத்தில் நிகழ்ந்த கோரமான விமான விபத்தில் அஜித் பவாா் மற்றும் பிறா் உயிரிழந்த செய்தி இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. உயிரிழந்தவா்களின் ஆன்மா சாந்தியடையட்டும். மதிப்பிற்குரிய சரத் பவாா் ஜி, சுப்ரியா சுலே ஜி மற்றும் அவா்களது முழு குடும்பத்தினருக்கும், மதிப்பிற்குரிய அஜித் பவாா் ஜியின் ஆதரவாளா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று கூறியுள்ளாா்.
முன்னதாக, புதன்கிழமை காலை புணே மாவட்டத்தில் அஜித் பவாா் உள்ளிட்டோா் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் பவாா் மற்றும் நான்கு போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். அஜித் பவாா் (66) மற்றும் பிறரை ஏற்றிச் சென்ற விமானம் பாராமதிக்கு அருகில் தரையிறங்கியபோது இந்த விபத்துச் சம்பவம் நிகழ்ந்ததாக அவா்கள் கூறினா்.