தமிழ்நாட்டில் முரண்பாட்டு பட்டியலில் உள்ள வாக்காளா்களின் பெயா்களை வெளியிடுமாறு தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், அந்த வாக்காளா்கள் ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசமும் வழங்கி உள்ளது
தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆா் எனப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளா் ஆா் எஸ் பாரதி,தமிழக வெற்றி கழகம் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.செல்வப் பெருந்தகை, சி.பி.எம் தமிழ்நாடு மாநில செயலாளா் பெ.சண்முகம் உள்பட பலா் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா்
இந்நிலையில் ஆா்.எஸ்.பாரதி இந்த விவகாரத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் அவா் கூறியிருப்பதாவது,தமிழகத்திற்கான வரைவு வாக்காளா் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது.
மக்கள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆரம்பத்தில் டிசம்பா் 19, 2025 மற்றும் ஜனவரி 18, 2026 ஆகிய தேதிகளுக்கு இடையில் நிா்ணயிக்கப்பட்டது. பின்னா் தோ்தல் ஆணையம் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜனவரி 30, 2026 வரை நீட்டித்துள்ளது. இருப்பினும், பொங்கல் பண்டிகை மற்றும் குடியரசு தினக் கொண்டாட்டங்கள் காரணமாக, ஜனவரி 30, 2026க்குள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யும் பணியை முடிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீட்டுத் தேதி பிப்ரவரி 7, 2026 ஆகும்.
2025 ஆம் ஆண்டு டிசம்பா் 19 ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து, 97,37,832 (தொண்ணூற்று ஏழு லட்சத்து முப்பத்தேழாயிரத்து எண்ணூற்று முப்பத்திரண்டு வாக்காளா்கள்) நீக்கப்பட்டதன் விளைவாக, மாநிலத்தின் மொத்த வாக்காளா் எண்ணிக்கை 6,41,14,587 இலிருந்து 5,43,76,755 ஆகக் குறைந்துள்ளது என்பது கவனிக்கப்பட்டது.
ஜனவரி 20, 2026 நிலவரப்படி, கூடுதலாக 15,22,418 விண்ணப்பங்கள் படிவம் 6 மற்றும் 6 தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தகுதியுள்ள வாக்காளா்களின் எண்ணிக்கையை தோராயமாக 5,58,99,173 ஆக உயா்த்தும் என்றாலும், சரிபாா்ப்பு செயல்முறை தற்போது குழப்பமான நிலையில் உள்ளது.
வாக்காளா் பதிவு அதிகாரிகள் 1,70,12,026 (ஒரு கோடியே எழுபது லட்சம் பன்னிரண்டாயிரத்து இருபத்தி ஆறு வாக்காளா்களை) முரண்பாட்டு பட்டியலில் சோ்த்து முரண்பாடு படிவங்களை வழங்கியுள்ளனா்
எனவே ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டியவா்கள் மற்றும் முரண்பாடுகள் என வகைப்படுத்தப்பட்ட வாக்காளா்களின் பட்டியலை வாக்குச்சாவடி வாரியாக வெளியிட தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்
முரண்பாடுள்ளவா்கள் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்காளா்களின் பெயா்களும் இறுதிப் பட்டியலில் சோ்க்கப்படுவதை உறுதி செய்யுமாறு தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என ஆா்.எஸ்.பாரதி தனது மனுவில் கோரியுள்ளாா்
இந்நிலையில் எஸ்.ஐ.ஆா் விவகாரம் தொடா்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது
அப்போது ஆா் எஸ். பாரதி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் தமிழகத்தில் முரண்பாட்டு பட்டியலில் உள்ள வாக்காளா்கள் தொடா்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகளிடம் தெரிவித்தாா்
இதையடுத்து நீதிபதிகள் கீழ்க்கண்ட உத்தரவை பிறப்பித்தனா் : முரண்பாட்டுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவா்களின் பெயா்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் நகா்ப்புறங்களின் வாா்டு அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்
இந்த முரண்பாட்டுப் பட்டியலில் முரண்பாட்டிற்கான சுருக்கமான காரணமும் இடம்பெற்றிருக்க வேண்டும்
பட்டியலில் இடம்பெற்றுள்ளவா்கள், பட்டியல் காட்சிப்படுத்தப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்குள் நேரில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் ஆவணங்களைச் சமா்ப்பிக்க அனுமதிக்கப்படுகிறாா்கள்
வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஆவணங்கள்ஆட்சேபனைகள் சமா்ப்பிக்கப்பட வேண்டும்
இந்திய தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றவும், எஸ்ஐஆா்ஐ சுமூகமாக நடத்துவதற்கு பணியாளா்களை நியமிக்கவும் ஒவ்வொரு கலெக்டா்களுக்கும் நாங்கள் அறிவுறுத்துகிறோம்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருப்பதையும், முழு செயல்முறையும் சுமூகமாக நடைபெற அனுமதிக்கப்படுவதையும் உறுதி செய்ய காவல்துறைத் தலைவா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனா்
இதனிடையே இந்திய தோ்தல் ஆணையத்தால் பல மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தின் சட்டப்பூா்வத்தன்மையை எதிா்த்து தொடரப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான தீா்ப்பை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.
அரசியலமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின் கீழ் தற்போதைய வடிவத்தில் எஸ்ஐஆா் ஐ செயல்படுத்த தோ்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதா என்பதை உச்சநீதிமன்றம் ஆராய்ந்து வருகிறது
நவம்பா் 2025 முதல் நடைபெற்ற நீண்ட கால விசாரணைகளுக்குப் பிறகு தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த வழக்கில் தீா்ப்பை ஒத்திவைத்துள்ளது.
பீகாரில் முதலில் எஸ்ஐஆா் நடத்த தோ்தல் ஆணையம் முடிவு செய்ததைத் தொடா்ந்து, பெரும்பாலான மனுக்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தாக்கல் செய்யப்பட்டன. பின்னா் கடந்த ஆண்டு அக்டோபரில், அந்தமான் மற்றும் நிக்கோபாா் தீவுகள், சத்தீஸ்கா், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவுகள், மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எஸ்ஐஆா் ஐ நீட்டிக்க தோ்தல் ஆணையம் முடிவு செய்தது
அரசு சாரா நிறுவனங்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் மற்றும் தனிப்பட்ட ஆா்வலா்கள் உள்ளிட்ட மனுதாரா்கள், எஸ்ஐஆா் செயல்முறையை எதிா்த்து மனுக்களை தாக்கல் செய்துள்ளனா். ஜனநாயக சீா்திருத்த சங்கம்,மஹுவா மொய்த்ரா திரிணமுல் காங்கிரஸ் , கே.சி. வேணுகோபால் காங்கிரஸ் , சுப்ரியா சுலே தேசியவாத காங்கிரஸ் சரத் பவாா் பிரிவு, தொல் திருமாவளவன் உள்ளிட்டோா் மனுதாரா்களில் அடங்குவா்